கருணைக்கிழங்கு புளிக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கருணைக்கிழங்கு - 100 கிராம்
2. பூண்டு பற்கள் - 10 எண்ணம்
3. சாம்பார் வெங்காயம் - 10 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. சாம்பார் தூள் - 1 மேசைக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. புளி - எலுமிச்சம்பழ அளவு
8. நல்லெண்ணை - 2 தேக்கரண்டி
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
11. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது
13. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 2 முதல் 3 கிண்ணம் அளவிற்குப் புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. கருணைக்கிழங்கைக் கழுவித் தோலைச் சீவி, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
3. பூண்டு, வெங்காயம் ஆகியவற்றின் தோலை உரித்து வைக்கவும். தக்காளியைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
5. பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.
6. தக்காளியைச் சேர்த்து சற்று வதக்கிய பின் அதில் கருணைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி விடவும்.
7. அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.
8. பின்னர் அதில் புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில், கிழங்கு வேகும் வரை மூடி போட்டு வேக விடவும்.
9. குழம்பு நன்றாகக் கொதித்து, கிழங்கும் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.