மோர் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மோர் - 1 கப்
2. வெள்ளரிக்காய் - 100 கிராம்
3. தேங்காய்த் துருவல் - 1/2 கப்
4. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
7. சின்ன வெங்காயம் - 3 எண்ணம்
8. கடுகு - 1 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
10. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
11. கறிவேப்பிலை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
13. தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வெள்ளரிக்காயினைத் தண்ணீரில் சுத்தம் செய்து, அதனை ஒரே மாதிரியான சிறு அளவிலான துண்டங்களாக வெட்டி, அதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
2. கடலைப் பருப்பைத் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
3. தேங்காய்த் துருவல், ஊற வைத்த கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம் ஆகியவற்றைப் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் வேக வைத்து எடுத்துள்ள வெள்ளரிக்காயினைப் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
5. அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவினையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
6. அதில் கடைந்து வைத்துள்ள மோரினைச் சேர்த்து நன்கு கலந்து, நெருப்பைக் குறைத்து வைத்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
7. அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மற்றும் கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
8. தாளிசத்தைக் குழம்பில் சேர்த்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.