கொண்டைக் கடலைக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கொண்டை கடலை - 200 கிராம்
2. நல்லெண்ணெய் - 50 மி.லி
3. தேங்காய் - 1 (சிறியது)
4. இஞ்சி - சிறு துண்டு
5. பூண்டு - 5 பல்
6. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
7. மல்லி - 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
9. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
10. மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
11. கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
12. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
13. இலவங்கம் - 3 எண்ணம்
14. பட்டை - 1 சிறு துண்டு
15. ஏலக்காய் - 2 எண்ணம்
16. கறிவேப்பிலை - சிறிது
17. மல்லித்தழை - சிறிது
18. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.
2. மறுநாள் காலை ஊற வைத்த கடலையுடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
3. தேங்காயின் ஒரு பகுதியைத் துருவலாகவும், ஒரு பகுதியைத் தேங்காய்ப் பாலாகவும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
4. ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், உரித்த பூண்டு, மல்லி, மிளகாய் வற்றல் மற்றும் நறுக்கிய வெங்காயம் சிறிது போட்டுத் தாளிக்க வேண்டும்.
5. தாளிசத்துடன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி, சிறிது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
6. தாளிசப் பொருட்களுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து சூட்டிலேயே நன்கு கிளறி ஆற விட வேண்டும்.
7. அது ஆறியவுடன் அதை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
8. வேகவைத்த கொண்டைக் கடலையுடன் இந்த விழுதைச் சேர்த்து வேக வைக்கவும்.
9. அத்துடன் தேங்காய் பால் சேர்த்துக் கெட்டியாகத் திரண்டு வரும் வரை வேக விடவும்.
10. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இலவங்கம், பட்டை, ஏலக்காய், பொடியாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து குழம்புடன் சேர்த்து இறக்கவும்.
11. இறக்கி வைத்த குழம்பில் மேலாக மல்லித் தழை தூவி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.