வெந்தய ரசம்
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. புளி - சிறிய எலுமிச்சை அளவு
2. தக்காளி (பழுத்தது) - 1 எண்ணம்
3. துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
5. கல் உப்பு - தேவையான அளவு
தாளிக்க
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. வெந்தயம் - 1 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
9. கறிவேப்பில்லை - சிறிது
10. எண்ணெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
1. தக்காளியைச் சுத்தம் செய்து, நறுக்கித் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
2. பின்னர் அதனுடன் புளியைச் சேர்க்கவும்.
3. துவரம் பருப்பை நன்கு களைந்து, கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டுக் குழைய வேகவிடவும்.
4. ஒரு பாத்திரத்தில் நன்கு புளி, தக்காளி நன்கு கரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.
6. பின்னர் அதை புளிக்கரைசலுடன் சேர்க்கவும்.
7. மீதி இருக்கின்ற மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கொதிக்க வைக்கவும்.
8. கொதித்து வரும் முன்பாகக் குழைந்த துவரம் பருப்பைச் சேர்க்கவும்.
9. ரசம் பொங்கி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
முக்கியக் குறிப்பு
1. மெந்திய ரசத்திற்கு நெய், கொத்த மல்லித்தழைப் போடவேக் கூடாது.
2. சில பேர் துவரம்பருப்பை தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் தாளித்துப் போடுவார்கள். அது கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும்.
3. இந்த ரசம் பொங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும். ரொம்பக் கொதிக்கக் கூடாது.
4. நன்கு சாதம் குழைய வடித்து, இந்த ரசத்தை அதனுடன் சேர்த்து சாப்பிடலாம். நன்றாக இருக்கும்.
5. ஃப்ரைடு ரைஸ் அல்லது கலவை சாதம், சாம்பார் சாதம், செய்யும் போது, இதை சூப்பாக (ஸ்டாட்டர்) குடிக்கலாம்.
6. காரம் அதிகம் விரும்புபவர்கள் 2 மிளகாய் வற்றலைக் கூடுதலாகச் சேர்க்கலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.