* வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்துப் பிசையவும். அப்படிச் செய்தால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
* சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
* சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரை கப் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
* தேங்காய்த் துருவல் மீதியானால், அதை இலேசாக வதக்கி, சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* சாம்பார் பவுடர் மற்றும் ரசம் பவுடர் பாக்கெட்டுகளை பிரிஜ்ஜின் பிரீஸரில் வைத்து உபயோகிங்கள். மணம் மாறாமல் இருக்கும்.
* வெங்காய சட்னி கசக்காமல் இருக்க, வெங்காயத்தைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கிய பின் அரைத்தால் சட்னி கசக்காமல் ருசிக்கும்.
* சாப்பாட்டுப் பொட்டலமாகக் கட்டும் போது, வாழை இலையைப் பின்புறமாகத் திருப்பி தணலில் இலேசாகக் காட்டிய பின்னர் கட்டினால் இலை கிழியாமல் இருக்கும்.
* பீன்ஸ், பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் நன்றாகக் குழைய வேகவைக்க, முதலில் உப்புப் போடாமல் வேக வைத்து, வெந்த பிறகு உப்பு சேர்க்க வேண்டும்.
* பன்னீர் மசாலா செய்யும் போது, பன்னீரை வறுத்தவுடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.
* சுவர்களில் ஆணி தேவையில்லை எனில், அதை எடுத்து விட்டுச் சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால் ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும்.
* விஷேசங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டு புடவையை களைந்து உடனே மடித்து வைக்க கூடாது. நிழலில் காற்றாட இரண்டு அல்லது மூன்று மணி நேரம் உலரவிட்டு, அதன் பின்பு அதனைக் கைகளால் அழுத்தித் தேய்த்து மடித்து எடுத்து வைக்க வேண்டும்.
* வீட்டில் எறும்புப் புற்று இருந்தால், அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
* துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
* எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.
* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாகாமால் தடுக்கலாம்.
* உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்தால் ஓட்டை அடைபடும்.
* பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.
* பொருட்களை கரையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.
* இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
* காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.
* வெள்ளை நிற வாஸ்பேசின், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்க்கை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் கழுவிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.
* வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.
* ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தால், வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள். காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.