கோடைக்கால வெப்பம் அதிகமாக இருக்கும் காலம் இது. இக்காலத்தில் வெப்பத்தினால் உடலிலிருந்து வெளியேறக் கூடிய / வீணாகக் கூடிய சக்திகளால் உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறைந்து அதிக சோர்வு ஏற்படுகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர் குடிப்பதால், தாகம் தீர்ந்து போய் விடுவதுடன், சிறிதளவு நீர்ச்சத்தும் கிடைக்கும். இருப்பினும், கோடைக்காலத்தில் தண்ணீரை விட அதிக அளவிலான நீர்ச்சத்து கிடைக்கக் கூடிய சில உணவுகளை உண்பது / அருந்துவது நல்லது.
வெள்ளரிக்காய்
வெயிலினால் உடலில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் போன்றவைகள் வீணாவதை வெள்ளரிக்காய் ஈடுசெய்கிறது. வெள்ளரிக்காயைத் தயிரில் ஊறவைத்தும் சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து 96.3%, கார்போஹைட்ரேட் 2.5%, பைபர் 0.4% கால்சியம் 10mg/dl போன்றவை உள்ளன.
கேரட்
கோடை நேர உணவுகளில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெயில் நேரங்களில் அதிகமாகச் சாப்பிடலாம். காரணம், இந்நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் அதிகம் உஷ்ணமாவதால் திடீர் மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்களுக்கு ரத்த அழுத்தம் சீரற்று இருக்கும். ஆகையால் கேரட்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும். இதில் நீர்ச்சத்து 86%, கார்போஹைட்ரேட் 10.7%, பாஸ்பரஸ் 530mg/dl, கால்சியம் 80mg/dl உள்ளது.
கேரட் மற்றும் வெள்ளரிக்காய்
கேரட் - 2 மற்றும் வெள்ளரிக்காய் - 3 என்று இரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்து தினமும் இரண்டு முறை பருகினால் உடல் உஷ்ணம் குறைந்து, தோள் நோய் ஏற்படுவதும் குறையும். இதனைக் கோடைக்காலச் சிறப்பு உணவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தர்ப்பூசணி
வெப்பத்தினால் வறண்டு போகிற உள் உறுப்புக்களுக்குச் சக்தி கொடுத்துச் சுறுசுறுப்பாக்கிறது. கொழுப்பு சக்தி இல்லாமல் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கக் கூடிய அற்புதமான பழம், தர்ப்பூசணி. கோடை நேரங்களில் இதை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழலாம் என்கிற அளவிற்கு இதில் நீர்ச் சத்து உள்ளது. தர்ப்பூசணி சாதாரணமாக சாலையோரக் கடைக்களிலேயே கிடைக்கிறது. இதில் வைட்டமின் நீ 4.5 dl , வைட்டமின் கி 556.3 மிஹி/லி2 பொட்டாசியம் 176.32 mg/dl உள்ளது.
எலுமிச்சை
கோடைக்காலத்தில் வெப்பத்தினால் இழப்பாகும் வைட்டமின் சி சக்தியை, மீண்டும் உடலுக்குத் திருப்பிக் கொடுத்து, உடல் முழுவதும் சோர்ந்து துவண்டுபோகாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். உடலின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கும், நரம்புகளில் ஏற்படும் கொழுப்புப் படிமங்களைக் கரைக்கக் கூடிய சக்தியும் இதற்கு உண்டு. எலுமிச்சையோடு சர்க்கரை கலந்து குடிக்காமல், உப்பு கலந்து குடிப்பதன் மூலம் உடலில் தங்கும் நச்சு வியர்வையை வெளியேற்ற உதவும். இதில் நீர்ச்சத்து 85%, வைட்டமின் சி 55mg/dlம் அதிகமாக உள்ளதால் நம் உடலை நீர்த் தன்மையோடு வைத்திருக்க உதவும்.
தர்ப்பூசனி மற்றும் எலுமிச்சை
தர்பூசணிச் சாறுடன் எலுமிச்சை சாறைச் சேர்த்து அருந்தினால், கண்கள் பாதிப்பு அடையாமல் உஷ்ணத்திலிருந்து காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
சீதாப்பழம்
மற்ற எல்லா பழங்களையும் விட கோடைக்குச் சிறந்தது சீதாப்பழம். ஏனென்றால் இதில் குளுக்கோஸ் உள்ளது. இதன் மூலம் அதிகமான சுறுசுறுப்போடும், எனர்ஜியோடும் இருக்க உதவும். இதில் குளுக்கோஸ் அளவு 14.5%, நீர்ச்சத்து 73.2%, சாக்கரோஸ் 1.7%, புரோட்டீன் 0.8% உள்ளது.
தக்காளி
கோடை வெப்பத்திற்கு தக்காளி ஜூஸ் சிறந்தது. அதில் சர்க்கரையைக் கலந்து குடிக்காமல், தேன் கலந்து குடிப்பது நலம். காரணம், சர்க்கரை கலந்து குடிப்பதால் வாயு, தொண்டைப் பிரச்னைகள் வரும். சர்க்கரை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் தேவை. தேன் சுலபமாக உடலில் கலந்து விடும். மேலும், வெயில் நேரங்களில் உடல் உறுப்புகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் நச்சுக்களை உடலிருந்து வெளியேற்றக் கூடிய சக்தி தக்காளிக்கு உண்டு. நீர்ச்சத்து 91.1%, புரோட்டீன் 0.9%, ஃபைபர் 0.8%, வைட்டமின் சி 30mg/dl, கார்போஹைட்ரேட் 3.4% உள்ளது.
இஞ்சி
இஞ்சியும், வெள்ளைப் பூண்டும் ஒரே அளவான சக்திகளை நம் உடலுக்குக் கொடுக்கிறது. இவைகளுக்கு இடையேயான ஒரே வித்தியாசம் இஞ்சியில் நீர்ச்சத்து அதிகம். கோடைக் காலத்தில் ஏற்படும் மயக்கம், குடலுக்குள் நீர்ச்சத்துக் குறைவதால் ஏற்படும் வாயுக் கோளாறுகள், வாந்தி போன்றவற்றைத் தடுக்கும். நீண்ட பயண நேரங்களில் இஞ்சிச் சாறுடன் தேன் கலந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் அடைத்துக்கொண்டு போங்கள். பயணத்தால் வரும் உடல் கோளாறுகளைத் தவிர்க்கலாம். நீர்ச்சத்து 81.0%, புரோட்டீன் 2.3% கார்போஹைட்ரேட் 12% அளவும் உள்ளது.
இளநீர்
சிறுநீரகம், கல்லீரல் இவைகளில் வெயில் காலத்தில் உப்புப் படிவங்கள் உருவாகி, அதுவே கல்லாக மாறும் நிலை உருவாகாமல் தடுக்கிறது. ‘ஒரு நாளைக்கு ஒரு இளநீர் என்கிற ரீதியில் குடித்து வந்தால், நோயாளிகளாக மருத்துவமனைக்குச் செல்லும் தேவை இருக்காது’ என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த அளவிற்கு, நம் உடலை பார்த்துக் கொள்ளக் கூடிய சக்தி இந்த இளநீருக்கு உண்டு. இளநீர் மூலம் சிறுநீரகம் சீராகச் செயல்படுவதோடு, உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதிலும் நீர்ச்சத்து அதிகம்.
வாழைப்பழம்
உணவு முடித்த ஒவ்வொரு வேளையிலும் வாழைப்பழம் உண்பது நலம். இது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்ள உதவும். மேலும் குடல் சீராகச் செயல்பட்டு, குடலுக்குள் நச்சுத் தன்மைகள் தங்கி வயிறு வலி போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் புண் உருவாகாது. ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களுக்கு உத்வேகத் தன்மையாகச் செயல்படும். வாழைப்பழம் உண்பதால் ரத்தத்தில் ஏற்படும் நீர்ச்சத்து குறைவிற்கு பாதுகாப்பு ஏற்படுகிறது. நீர்சத்து 70.1%, புரோட்டீன் 1.2%, கால்சியம் 85mg/dl, பாஸ்பரஸ் 50mg/dl, கார்போஹைட்ரேட் 7.2%.
மாதுளைபழம்
வெயிலில் அலைவதால் உடல் வியர்க்கிறது. வியர்வை உடலில் தங்குவதால் தொல்லைகள் அதிகம். கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுப் போக்கு, தோலில் ஏற்படும் அரிப்புகள், வயிற்றில் உள்ள பூச்சிகள் போன்றவையில் இருந்து பாதுகாக்கப்படும். வெயில் அதிகமான நேரங்களில் உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் சிக்கல்களை மாதுளைபழம் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். ஜுஸாக குடிப்பதன் மூலம் அதிக தண்ணீர் தாகம் எடுப்பதைத் தவிர்ப்பதற்கு உதவுகிறது. நீர்சத்து 78.0%, பாஸ்பரஸ் 70.mg/dl, ஃபைபர் 5.1%, புரோட்டீன் 1.6%.
கூடுதல் தகவல்கள்
* சமையல் காய்கறிகளில் விதையுள்ள காய்கறிகள் குளிர்ச்சியைத் தரும்.
* தயிர், மோர் தாராளமாக அருந்துங்கள். மோருடன் வேக வைத்த பூண்டு, மிளகுத் தூள், சிறிதளவு இஞ்சிச் சாறு சேர்த்துப் பருகுங்கள்.
* பழவகைகள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.
* காலைக் குளியலுக்கு வெந்நீரைத் தவிர்ப்பது நலம். சோப்புப் போடுவதற்கு முன்பு வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, தயிர், கடலை மாவு அரைத்து உடலில் பூசி குளியுங்கள்.
* தக்காளியுடன், இளநீரும் இஞ்சி அல்லது பூண்டு சேர்த்துக் குடிப்பதும் உஷ்ணத்தைத் தணிக்கும்.
* வாழைப்பழத்துடன் சீதாபழத்தையும் சேர்த்து ஜூஸ் வைத்துக் குடித்தால் சோர்வு குறையும்.