கோடைக்காலத்தில் உடலுக்கு நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால் தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் உட்கொள்ளவது நல்லது. வெள்ளரி, தர்பூசணியையும், முலாம் பழம் ஜீஸ் கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
காலை சாப்பிட வேண்டிய உணவுகள்
* இரவு வடித்த சாதத்தில் அதன் வடித்த கஞ்சியையும், சுத்தமான தண்ணீரையும் சேர்த்து மூடி வைக்க வேண்டும். காலையில் அந்தச் சாதம் புளித்திருக்கும். அதனுடன் சிறிது உப்பு, மோர் சேர்த்துக் காலையில் குடிக்கலாம். இந்த தண்ணீரில் விட்டமின் சத்துக்கள் நிறைய இருப்பதுடன் உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாவை வளர்க்க இது உதவுகிறது.
* உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே, கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம்.
* முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிடுவது நல்லது.
மதியம் சாப்பிட வேண்டிய உணவுகள்
* மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம்.
* மதிய உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் நிறைந்திருக்கலாம். இது சீரான உடல் நிலையுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
* தயிர் பச்சடி செய்து அதில் கேரட், வெங்காயம், வெள்ளரி என பிடித்த காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
* சாதத்துடன் மோர் அல்லது தயிரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
* அசைவ உணவு சாப்பிடும் பொழுது மதிய வேளையில் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
* மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது.
இரவு சாப்பிட வேண்டிய உணவுகள்
* இரவு 7 – 8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். தூங்கச் செல்கையில், அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும், ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடலாம்.
* உப்புமா, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் சாப்பிடலாம்.
* கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி வகைகளைச் சிறிதளவு சாப்பிடும்போது, நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.
கூடுதல் குறிப்புகள்
* அதிகத் தண்ணீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான தக்காளி, அதன் தனிச்சிறப்பான சிவப்பு நிறத்தைத் தரும் ‘லைக்கோபீன்‘ என்ற வேதிப்பொருள், வெயில் காலத்தில் நமது சருமம் வெயிலால் பாதிக்கப்படாமல் காக்கிறது.
* தக்காளியில் வைட்டமின் ஏ சத்தும் அதிகமாக உள்ளது.
* தினமும் காலை, மாலை இருவேளை குளியுங்கள்.
* காலைக்குளியலின் போது மட்டும் தலை மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து, நன்றாக ஊறவிட்டு, அதன்பின் குளிப்பது நல்லது. இப்படிச் செய்வதால் உடல்சூடு குறையும்.
* கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதைப் போக்க, இரவில் தூங்கும் முன் கண்களை சுற்றி விளக்கெண்ணெயை தடவினால் கண்கள் குளிர்ச்சி பெறும்.