* பட்டாணி சுண்டலுக்கு வேக வைக்கும் போது, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் சுவையும் மணமும் அதிகரிக்கும்.
* பச்சைப் பட்டாணியை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து வேக வைத்தால் பட்டாணி ஒன்றோடு ஒன்று ஒட்டாது, நிறமும் மங்காது.
* கலவை சாதம் செய்ய சாதம் சூடாக இருக்கும் போதே தேவையான உப்பும் எண்ணையும் கலந்து பிசறி விடவும். அப்போதுதான் உப்பு சமமாக பரவி இருக்கும்.
* நறுக்கிய வெங்காயத் துண்டுகளை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, பிறகு மாவில் தோய்த்து எடுத்தால் வெங்காய பஜ்ஜி கூடுதல் சுவையுடன் இருக்கும்.
* கத்தரிக்காய் கூட்டு, பொரியல் எது செய்தாலும் சிறிதளவு கடலை மாவைத் தூவி ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் மணம் கமகமவென்று இருக்கும்.
* அடைக்கு அரைக்கும் போது, மிளகாய் வத்தல் போட்டு அறைத்துப் பின் ஒரு பச்சை மிளகாய் நறுக்கி போட்டால் நல்ல வாசனையாக இருக்கும்.
* எந்த வகை சுண்டல் செய்தாலும், தனியா, வரமிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தைத் தலா ரெண்டு ஸ்பூன் எடுத்து வறுத்து, பின் இறுதியில் கசகசா விருப்பமெனில் சோம்பு ஒரு டீஸ்பூன் சேர்த்துப் பொடித்து, அந்தப் பொடியைத் தூவி இறக்கினால் மணம் மற்றும் ருசி அதிகரிக்கும்.
* எந்த வகை ஊறுகாய் என்றாலும் அதில் கடுகு எண்ணெய் சேர்த்தால் கெட்டுப்போகாது.
* ஊறுகாய் ஜாடியில் கொதிக்கும் எண்ணெயில் நனைந்த துணியால் உட்புறத்தை துடைத்துவிட்டு பிறகு ஊறுகாயைப் போட்டு வைத்தால் பூசணம் பிடிக்காது.
* ஊறுகாய்க்கு தாளிக்கும் போது சிறிது எள்ளை வறுத்து பொடித்து சேர்த்தால் மணம் கூடும். கெட்டும் போகாது.
* அடை மீந்து போய்விட்டால் கொஞ்சம் கெட்டியாகி விடும். அதை தூர எரியாமல் விருப்பமான வடிவில் வெட்டி பஜ்ஜி மாவில் நனைத்து, பஜ்ஜியாக எண்ணெயில் பொறித்து மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.
* தேங்காய் துவையலில் தனியாவையும் சிறிது சேர்த்து வறுத்து அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.
* வாடிய கொத்தமல்லித் தலையை வெதுவெதுப்பான வெந்நீரில் போட்டு எடுத்தால் புத்தம் புதிதாகிவிடும்.
* கருவேப்பிலை கொத்தாக ஈரம் போக காய வைத்து வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்து பவுடர் ஆக்கிக் கொண்டு உபயோகித்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* சிறுதானிய அவல் கொண்டு மிக்சர் இனிப்பு உருண்டை செய்து வைத்துக் கொள்ள, பசிக்கும் போது எடுத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
* பூரிக்கு மாவு பிசையும் போது சிறிதளவு ரவையை லேசாக வறுத்து, பூரி மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் பூரி மொறு மொறு என்று இருக்கும்.
* அப்பளத்தை உளுத்தம் பருப்பில் போட்டு வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப் போகாது.
* சேனைக்கிழங்கை நன்றாக வேக வைத்து உருளைக்கிழங்கு போண்டா போன்று செய்யலாம் ருசியாக இருக்கும்.
* வெண்டைக்காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி, வழவழப்பு போகும் வரை எண்ணையில் வதக்கி, கடைசியில் இறக்கும் போது, உப்பு காரம் போட்டு பிசறிவிட்டு இறக்குங்கள் நல்ல மொறு மொறுப்புடன் இருக்கும்.