* இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது ஐஸ் தண்ணீர் ஊற்றி அரைத்தால் மாவு நன்றாகப் பொங்கி வரும்.
* காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வராமல் இருக்க சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் போதும்.
* உளுந்து வடை செய்யும் போது அரைத்து எடுத்த மாவில் ஒரு பிடி கோதுமை மாவு சேர்த்துப் பிசைந்து செய்தால் வடை ருசியாக இருக்கும். எண்ணெய் குறைவாகச் செலவாகும்.
* அதிரசம் செய்யும் போது, ஈர அரிசி மாவை மட்டுமே உபயோகிக்க வேண்டும். மாவு உலர்ந்திருந்தால் அதிரசம் சரியாக வராது. அதே போலப் பாகு காய்ச்ச பாகு வெல்லத்தை மட்டுமேப் பயன்படுத்த வேண்டும்.
* கறிவேப்பிலையை அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் நான்கைந்து நாட்களானாலும் வாடாது.
* ரசம் கொதித்த பிறகு அரை டம்ளர் முதல் ஒரு டம்ளர் வரை கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து அடுப்பை அணையுங்கள். பிறகு வழக்கமான தாளிப்பை சேருங்கள். ரசம் ருசிக்கும்.
* அடை, தோசைக்கு மாவு அரைக்கும் போது அரிசி, பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்.
* இரவு சாதம் மீந்து விட்டால் மறு நாள் சிறிது பாசிப்பருப்பை வேகவைத்து, சாதத்தோடு சேர்த்துக் கிளறி சிறிது வெந்நீரில் வேகவிடவும். நெய்யில் மிளகு, சீரகம், பெருங்காயம் போட்டு, இஞ்சி, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்து போட்டு கிளறினால் கமகம மிளகுப் பொங்கல் தயார். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாற, சுவையாக இருக்கும்.
* வெந்தயக்குழம்பு கொதிக்கும் போது சுட்ட உளுந்து அப்பளத்தை நறுக்கிப் போட்டால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
* மல்லித் தழையை வாழை இலையில் சுற்றி பிரிட்ஜில் வைத்தால் ஐந்து நாட்கள் வரை பசுமையாக இருக்கும்.
* பீட்ரூட்டை முழுவதுமாகவே அல்லது பாதி நறுக்கியோ வேகவைத்த பிறகு தோலை உரித்துவிட்டு நமக்கு வேண்டிய அளவில் நறுக்கினால் சுலபமாக நறுக்க வரும்.
* தோசை சுடும் போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு எடுக்க வரவில்லையெனில், தோசைக்கல் முழுவதும் படியும் படிகல் உப்பை பரவலாகத் தூவி, ஐந்து நிமிடங்களுக்கு பிறகு உப்பை எடுத்து விட்டு தோசை ஊற்றுங்கள். உடையாமல் எடுக்க வரும்.