சமையல் - இட்லி மற்றும் தோசை
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. முழு கேழ்வரகு (ராகி)- 1 கப்
2. பச்சரிசி - 1/2 கப்
3. இட்லி அரிசி - 1/2 கப்
4. தேங்காய் துருவல் - 1/2 கப்
5. அவல் - 1/2 கப்
6. உளுந்து - 1/4 கப்
7. உப்பு - சிறிது
8. தேங்காய் - 1 எண்ணம்
9. சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
ஆப்பம்
1. பச்சரிசி, இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற விடவும்.
2. ஊற வைத்த பச்சரிசி, இட்லி அரிசி, தேங்காய் துருவல், அவல், உளுந்து, கேழ்வரகு ஆகியவற்றைச் சேர்த்து முதல் நாளே அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3. மறு நாள் காலையில், தண்ணீர் விட்டுத் தோசை மாவு போலக் கரைத்துக் கொள்ளுங்கள்.
4. ஆப்பச் சட்டியைக் காய வைத்து, இரண்டு கரண்டி மாவை எடுத்து, அதில் ஊற்றிச் சட்டியை இரு புறமும் பிடித்துக் கொண்டு, ஒரு சுற்றுச் சுற்றினால், அதன் மத்தியில் ஊற்றப்பட்டிருக்கும் மாவு, நடுவில் கனமாகவும், ஓரங்களில் மென்மையாகவும் படியும். உடனே சட்டியை மூடி, அளவாகத் தீயை எரிய விட்டுச் சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆப்பம் வெந்தவுடன் எடுக்கவும்.
தேங்காய்ப் பால்
1. தேங்காயைத் துருவிப் பாலெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய்ப் பாலுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து ஆப்பத்தில் ஊற்றிச் சாப்பிடவும்.
குறிப்பு:
1. முழு ராகி உங்களிடம் இல்லாவிடில், ராகி மாவை அரிசி உடன் சேர்த்து அரைத்து உப்பு கலந்து புளிக்க வைக்க வேண்டும். அரிசி மற்ற பொருட்கள் அரைத்த பின் ராகி மாவாகத்தானே இருக்கிறது கலந்து விடலாம் என்று நினைக்காமல், மிக்ஸியில் அரிசி உடன் ராகி மாவு போட்டு அரைக்க வேண்டும்.
2. தேங்காய்ப் பாலுக்குப் பதிலாகக் கேரளத்தினர் கருப்பு கொண்டக்கடலை குருமா செய்து சாப்பிடுவர். அப்படிச் சாப்பிடுவது நல்லதொரு சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.