அடைத் தோசை
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு
1. புழுங்கல் அரிசி - 1 கப்
2. பச்சரிசி - 1/2 கப்
3. உளுத்தம் பருப்பு - 1/2 கப்
4. துவரம் பருப்பு - 1/2 கப்
5. பாசிப்பயறு - 1/2 கப்
6. கொள்ளு - 1/2 கப்
7. கடலைப் பருப்பு - 1/2 கப்
8. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்
9. சோம்பு - 1 தேக்கரண்டி
10. சீரகம் - 1 தேக்கரண்டி
11. பூண்டு - 10 பல்
12. இஞ்சி - 1 துண்டு
13. உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு
14. வெங்காயம் - 2 எண்ணம்
15. மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
16. கறிவேப்பிலை - சிறிது
17. கடுகு - 1 தேக்கரண்டி
18. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
19. கசகசா - 1/2 தேக்கரண்டி
20. தேங்காய்த் துருவல் - 1/2 மூடி
21. எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
1. மேற்காணும் 1 முதல் 7 வரையிலான அரிசி மற்றும் பருப்புக்களை சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. பின்னர் அவற்றை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.
3. அப்படி அரைக்கும் போது, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள 8 முதல் 15 வரையிலான பொருட்களையும் சேர்த்து மிகவும் மென்மையாக அரைக்காமல், ஓரளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
4. பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டுத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
5. பின் அடுப்பில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெங்காயம் போட்டுப் பொன்னிறமாக வதங்கியவுடன், மல்லித்தழை, கசகசா சேர்த்து வதக்கிய பின், துருவிய தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்துப் பிரட்டி மாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.
6. பின், தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் தோசைகளாக வார்த்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு: அடைத்தோசைக்குத் தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.