காடை வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. காடை – 4 எண்ணம் (தொடைப் பகுதி)
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
3. தயிர் – 1/2 கிண்ணம்
4. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
5. மிளகுத் தூள் – 1 மேசைக்கரண்டி
6. கரம் மசாலாத் தூள் – 1 தேக்கரண்டி
7. உப்பு – 1 மேசைக்கரண்டி
8. இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
9. மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
10. மல்லித் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
11. எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
12. மல்லித் தழை – சிறிது
13. புதினாத் தழை – சிறிது
14. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. காடையின் தொடை பகுதியைச் சுத்தமாக கழுவி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கிண்ணம் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் வரை ஊற வைக்கவும். காடை நன்கு ஊறியதும் எடுத்துக் கழுவிக் கொள்ளவும்.
2. பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
3. புதினா மற்றும் கொத்தமல்லித் தழைகளைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்த பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும்.
5. அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் காடையைச் சேர்த்து வதக்கவும்.
6. இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. மிளகாய் தூள், மல்லித் தூள்,மிளகுத் தூள், உப்பு மற்றும் தயிரை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
8. காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாகச் சேரும்படி சில நிமிடம் நன்கு கிளறி விடவும்.
9. அதில் தண்ணீர் ஊற்றி வாணலியை ஒரு தட்டால் மூடி வைத்து பத்து நிமிடங்கள் வரை வேக விடவும். இடையிடையே மூடியைத் திறந்து பிரட்டி விடவும்.
10. தண்ணீர் வற்றி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.