கோழிப் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் (எலும்பில்லாதது) – 250 கிராம்
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
3. இஞ்சி – 1/2 அங்குலத் துண்டு
4. பூண்டு – 7 பல்
5. புதினா – 2 கொத்து
6. கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
10. கறிவேப்பிலை – 1 கொத்து
11. உப்பு – 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
1. பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. எலும்பில்லாத கோழிக்கறியை சுத்தம் செய்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் கால் கப் தண்ணீர் ஊற்றி, அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு போட்டுக் கோழித் துண்டங்களையும் சேர்க்கவும்.
4. கோழிக்கறியை பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து ஆற வைக்கவும்.
5. ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் தூளாக அரைத்துக் கொள்ளவும்.
6. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
7. அத்துடன் புதினா, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
8. பின்னர் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
9. அதனுடன் பொடியாய் அரைத்து வைத்துள்ள கோழி இறைச்சியைப் போட்டு மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலா போட்டு வதக்கவும்.
10. சிறிது நேரம் கழித்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்துப் பிரட்டிவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.