சிக்கன் கிரேவி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் - 500 கிராம்
2. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
5. தேங்காய் - 1 மூடி
6. பூண்டு - 5 பற்கள்
7. இஞ்சி - சிறிது
8. மல்லி - 2 மேசைக்கரண்டி
9. கசகசா - 1 மேசைக்கரண்டி
10. சீரகம் - ½ மேசைக்கரண்டி
11. சோம்பு - ½ மேசைக்கரண்டி
12. மஞ்சள் தூள் - ¼ மேசைக்கரண்டி
13. பட்டை - சிறிது
14. ஏலக்காய் - 2 எண்ணம்
15. கிராம்பு - 3 எண்ணம்
16. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
17. உப்பு - தேவையான அளவு
18. எண்ணெய் - தேவையான அளவு
19. கருவேப்பிலை - சிறிது
20. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.
2. சிக்கனை மஞ்சள் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் சேர்த்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அதன் பிறகு நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
3. சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய்த்தூளைச் சேர்த்து அதை நன்கு பிரட்டி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து சுமார் 30 நிமிடம் வரை ஊற விடவும்.
4. ஒரு வாணலியில் மிதமான சூட்டில் மல்லி, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பைச் சேர்த்து இலேசாக வறுத்து பின்னர் சிறிது நேரம் ஆற வைக்கவும்.
5. ஆறிய பின்பு, அதனை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
6. நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அதனுடன் கசகசாவைச் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
7. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பைப் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
8. அதன் பிறகு, நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கருவேப்பிலையைச் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
9. வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு கிளறி விட்டு அதை இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.
10. அதன் பிறகு, சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.
11. நன்கு வதங்கிய பிறகு, அதில் அரைத்து எடுத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீரைத் தெளித்து அதை நன்கு கிளறி விட்டு வதக்கவும்.
12. அத்துடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்து, அதை நன்கு கிளறி விட்டு அடுப்பைக் குறைத்து மூடி போட்டு சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும்.
13. பிறகு மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி, அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காயைச் சேர்த்து நன்கு கிளறி விட்டு பின்பு, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து மூடி போட்டு அதை மீண்டும் வேக விடவும்.
14. பத்து நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து சிறிதளவு மல்லித்தழையைத் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.