நாட்டுக் கோழிக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நாட்டுக் கோழி – 1கிலோ.
2. வெங்காயம் – 5 எண்ணம்.
3. தக்காளி – 6 எண்ணம்.
4. பச்சை மிளகாய் – 5 எண்ணம்.
5. காய்ந்த மிளகாய் – 4 எண்ணம்.
6. பூண்டு –16 பற்கள்.
7. இஞ்சி – 100 கிராம்.
8. சீரகம் – 4 தேக்கரண்டி.
9. மிளகுத்தூள் – 4 தேக்கரண்டி.
10. சோம்பு – 2 தேக்கரண்டி.
11. பிரிஞ்சி இலை –2.
12. மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி.
13. மிளகாய்த்தூள் –4 தேக்கரண்டி.
14. தனியாத்தூள் – 2 தேக்கரண்டி.
15. தேங்காய் – 1 மூடி.
16. எண்ணெய் – 6 மேசைக்கரண்டி.
17. கறிவேப்பிலை – தேவையான அளவு.
செய்முறை:
1. இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. சுத்தம் செய்த நாட்டுக் கோழியைச் சிறு சிறு துண்டுகளாக, அங்குமிங்குமாகக் கீறி, அதன் மேல் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. சீரகம், மிளகு, தேங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, 1 தேக்கரண்டி சோம்பு, சேர்த்து தண்ணீர் விடாமல் மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.
4. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும், பிரிஞ்சி இலை, 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து பொரித்து, வெங்காயம் சிறிதாக வெட்டி சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
5. பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
7. கோழிக்கறியைச் சேர்த்து தண்ணீர் விடாமல் வேகவைக்கவும்.
8. கோழிக்கறி முக்கால் பாகம் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலாவைக் கலந்து தண்ணீர் ஊற்றித் தொடர்ந்து வேக விடவும்.
9. கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேக விடவும்.
10. கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.