மொச்சைப் பயறு - கருவாட்டுக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கருவாடு_100 கிராம்
2. கத்தரிக்காய் - 5 எண்ணம்
3. பச்சை மொச்சைக் காய் பயறு - 200 கிராம் (உரித்தது)
4. புளி - எலுமிச்சை அளவு
5. சின்ன வெங்காயம் -10 எண்ணம்.
6. தக்காளி - 1 எண்ணம்.
7. பூண்டு - 5 பற்கள்.
8. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி.
9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி.
10. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி.
11. மிளகாய்த்தூள் - தேவையான அளவு.
12. உப்பு - தேவையான அளவு.
13. கறிவேப்பிலை - சிறிது.
முன் குறிப்பு:
1. பச்சை மொச்சைக்காயை பயறாக உரித்து எடுத்துக் கொள்ளவும். (பச்சை மொச்சைக்காய் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கும். மொச்சைப் பயறு கிடைக்காதவர்கள் மொச்சைப் பயறை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அதன் மேல் தோலை நீக்கிப் பயன்படுத்தலாம்)
2. புளியைத் 200 மி.லி. அளவுத் தண்ணீரில் ஊற வைத்துக் கரைசலாக்கவும்.
3. கருவாடை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவும்.
செய்முறை:
1.வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெந்தயம், கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். (தாளிசத்தில் கடுகு, உளுந்து சேர்க்க விரும்புபவர்கள் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்)
2. நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு, தக்காளித் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
3. மொச்சைப் பயறு, கருவாட்டுத் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பைச் சேர்த்துக் கிளறவும்.
4. அவை வதங்கியதும், புளிக்கரைசலை ஊற்றிக் காரம், உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.
5. நன்றாகக் கொதித்து வரும் போது, நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்த் துண்டுகளைப் போட்டுக் காய் வெந்த பின்பு இறக்கி வைக்கவும்.
குறிப்பு:
1. இங்கு நெய்மீன் போன்ற துண்டுக்கருவாடுகள் மட்டுமின்றி, நெத்திலி போன்ற வேறு சிறு அளவிலான கருவாடுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. குழம்பு சிறிது கூடுதலாக இருக்க வேண்டும் என்பவர்கள் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.