செட்டிநாடு இறால் வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. இறால் - 1/4 கிலோ
2. மிளகாய் வற்றல் - 20 எண்ணம்
3. வெங்காயம் - 2 பெரியது
4. சோம்பு - ஒரு தேக்கரண்டி
5. சீரகம் - ஒரு தேக்கரண்டி
6. தக்காளி - 2 எண்ணம்
7. தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
10. உப்பு - சிறிது
11. எண்ணெய் - 2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைச் சிறிதாகவும் வெட்டி வைக்கவும்.
3. தேங்காய் துருவல், மிளகாய் வற்றல் 15 எண்ணம், சோம்பு, சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறத்துக்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
6. சுத்தம் செய்த இறாலுடன், மஞ்சள்தூள் சேர்த்துப் பிசறி வாணலியில் போட்டு வதக்கவும்.
7. நன்கு வதங்கியதும், சிறிது தண்ணீர் சேர்த்து, அதில் இஞ்சிப் பூண்டு விழுது சேர்க்கவும்.
8. அத்துடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் வற்றல் கலவையைச் சேர்க்கவும்.
9. நீர் வற்றும் வரை கிளறிப் பின்னர் கீழே இறக்கி வைக்கவும்.
10. மற்றொரு வாணலியில் அல்லது கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் மீதமிருக்கும் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அந்தத் தாளிசத்தை இறக்கி வைத்திருக்கும் இறால் மீன் கலவையுடன் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.