நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நெத்திலிக் கருவாடு – 100 கிராம்
2. கடுகு – 1 தேக்கரண்டி
3. சீரகம் – 1 தேக்கரண்டி
4. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
6. கறிவேப்பிலை – சிறிது
7. சின்ன வெங்காயம் – 20 எண்ணம்
8. தக்காளி – 2 எண்ணம்
9. மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
10. மல்லித் தூள் – 2 மேசைக்கரண்டி
11. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
12. புளி – நெல்லிக்காய் அளவு
13. மாங்காய் – 1 எண்ணம்
14. உப்பு – தேவையான அளவு
15. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் நெத்திலிக் கருவாடைச் சுடுநீரில் போட்டு பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி அதன் தலையை நீக்கிவிட்டுத் தனியாக வைக்கவும்.
2. வெங்காயத்தைத் தோலுரித்து நறுக்கி வைக்கவும், தக்காளியைச் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை கிள்ளி வைக்கவும். மாங்காயை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. புளியைச் சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
5. பின்பு, அதில் வெங்காயம், பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, தக்காளியைச் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
6. அதில் நறுக்கிய மாங்காய்த் துண்டுகளைப் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாங்காய் பாதியாக வெந்ததும், உப்பு, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்துக் கிளறிவிடவும்.
7. புளிச்சாற்றினை ஊற்றி, எண்ணெய் தனியாகப் பிரியும் வரை குழம்பை நன்கு கொதிக்க விட வேண்டும்.
8. பின் கருவாட்டைச் சேர்த்து பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.