நெத்திலி மீன் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நெத்திலி மீன் – 250 கிராம்
2. வெங்காயம் – 2 எண்ணம்
3. தக்காளி – 3 எண்ணம்
4. புளி – எலுமிச்சை அளவு
5. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
6. மிளகாய்த் தூள் – 2 1/2 தேக்கரண்டி
7. தேங்காய் – 1/4 மூடி
8. மாங்காய் – 1 எண்ணம்
9. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
10. கடுகு – 1/2 தேக்கரண்டி
11. சீரகம் – 1/2 தேக்கரண்டி
12. உப்பு – தேவையான அளவு
13. கருவேப்பிலை – சிறிது
14. மல்லித்தழை – சிறிது
செய்முறை:
1. நெத்திலி மீனைச் சுத்தம் செய்து, இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசிக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு மாங்காயை நான்கு துண்டுகளாக அரிந்து வைக்கவும்.
4. புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, அதனைக் கரைத்துப் புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
5. பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு மண் சட்டியை வைக்கவும். சட்டி நன்றாகக் காய்ந்ததும் அதில் 6 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
6. எண்ணெய் நன்றாகச் சூடானதும், அதில் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
7. பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. பிறகு, இவற்றுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அவற்றுடன் மாங்காயையும் சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
9. புளிக்கரைசலை சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
10. குழம்பு நன்றாகக் கொதித்ததும், நெத்திலி மீனைச் சேர்த்து, ஒரு கொதி வரும்வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
11. பின்னர், கால் மூடி தேங்காயைத் துருவி, அவற்றை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து, குழம்புடன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
12. இறுதியாக, மல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.