மட்டன் - உருளைக்கிழங்கு பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 250 கிராம்
2. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
3. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
4. மல்லி - 2 கரண்டி
5. சீரகம் - 1 கரண்டி
6. மிளகு - 10 எண்ணம்
7. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
8. கறிவேப்பிலை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
13. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
14. இஞ்சி - 1 துண்டு
15. பூண்டு - 5 பல்
16. தேங்காய் - அரை மூடி
17. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மல்லி, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
2. அதனுடன் மிளகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
3. நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி ஆறிய பின்பு மிக்சியில் விழுதாக அரைத்து வைக்கவும்.
4. இந்த மசாலா விழுதில் நீர் ஊற்றிக் கலந்து ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து குக்கரில் அதனுடன் சேர்த்து ஆறு விசில் வரை வேகவிடவும்.
5. கடாயை அடுப்பில் வைத்து, குக்கரில் விசில் போன பின்பு, மசாலாவுடன் வெந்த ஆட்டுக்கறியைச்சேர்த்து கொதிக்க விடவும்.
6. உருளைக்கிழங்கைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி கலவையில் சேர்த்து வேக விடவும்.
7. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
8. மசாலா கலவை ஆட்டுக்கறி, உருளைக்கிழங்குடன் சேர்ந்து கெட்டியாக வரும் வரை வதக்கி இறக்கி வைக்கவும்.
9. கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்து பொரிந்த பின் நீள வாக்கில் அரிந்த பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
10. இஞ்சி பூண்டை நன்கு தட்டிச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
11. மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
12. கடைசியாக வெந்த உருளைக்கிழங்கு, மட்டன் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
13. துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு கலக்கி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.