ரவா பூரி பாயாசம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 100 கிராம்
2. மைதா - 2 தேக்கரண்டி
3. பால் - 1 லிட்டர்
4. சர்க்கரை - 150 கிராம்
5. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
6. திராட்சை - 10 எண்ணம்
7. ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. நெய் - சிறிதளவு
10. உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
1. பாலை அடுப்பில் வைத்து அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சவும்.
2. முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, மைதா, ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிப் பிசறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து, பூரி மாவு போல் பிசைந்து மாவை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
4. பிறகு இந்த மாவைப் பூரி போல் திரட்டி வைக்கவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், திரட்டி வைத்தப் பூரியைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
6. சுண்டிய பாலில் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்த பின் இறக்கி, பூரியை நொறுக்கி அதில் போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.