கோதுமை பாயாசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. உடைத்த கோதுமை – 1 கப்
2. வெல்லத்தூள் – 1 கப்
3. நெய் – 2 மேசைக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் – 1 கப்
5. பால் – 1/2 கப்
6. பாதாம் பருப்பு - 7 எண்ணம்
7. முந்திரிப் பருப்பு - 7 எண்ணம்
8. கிஸ்மிஸ் (உலர்ந்த திராட்சை) – 10 எண்ணம்
9. ஏலக்காய்த் தூள்– சிறிது
10. கசகசா - சிறிது
செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் உடைத்த கோதுமை மற்றும் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பின்னர் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
2. ஒரு குக்கரில் ஊற வைத்த உடைத்த கோதுமையைச் சேர்த்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேக வைப்பது போன்று நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்.
3. விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிடவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து வைக்கவும்.
5. வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் முழுவதுமாகக் கரையும் வரை சூடுபடுத்திப் பாகு போல் தயார் செய்யவும்.
6. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல் மற்றும் வறுத்த கசகசாவைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவும்.
7. அரைத்த விழுதைக் கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.
8. பின்னர் அதனை, மூடியைக் கொண்டு மூடி மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் வரை அந்தக் கலவையை வேகவிடவும்.
9. அதன் பின், அந்தக் கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்து, கட்டி சேரவிடாமல் நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டதும் ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
10. வாணலியில், நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
11. அதனுடன் இரண்டு கரண்டி நெய் சேர்த்துக் கிளறிவிட்டு, பின் கடைசியாக அதில் பால் சேர்க்கவும்.
12. பாலை நன்கு கலந்துவிட்ட பின், ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.