குதிரைவாலி அரிசிப் பொங்கல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. குதிரைவாலி அரிசி - 1 கப்
2. பாசி பருப்பு - 1/4 கப்
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. முந்திரி - சிறிது
6. நெய் - 2 தேக்கரண்டி
7. இஞ்சி - 1 சிறிய துண்டு
8. கறிவேப்பிலை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2. குதிரைவாலி அரிசியைக் களைந்து, அதனுடன் வறுத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் வைத்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.
3. குக்கர் நன்கு ஆறியவுடன், திறந்து, வெந்த குதிரைவாலி அரிசி மற்றும் பருப்பைக் கரண்டியால் இலேசாக மசிக்கவும்.
4. கெட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றி உங்களுக்குத் தேவையான அளவிற்குத் தளர்த்திக் கொள்ளவும்.
5. பின்னர் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
6. பின்பு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில், மிளகு, சீரகம், முந்திரி போட்டுச் சிவக்க வறுக்கவும்.
7. அதன் பிறகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துப் பொங்கலில் சேர்க்கவும்.
குறிப்பு: தேங்காய்ச் சட்னி சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.