புதினா - மல்லி சாதம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சாதம் (உதிர் உதிராக வடித்தது) - 4 கப்
2. புதினா- 1 கட்டு
3. மல்லித்தழை – 1 கைப்பிடி
4. மிளகாய்வற்றல்- 3 எண்ணம்
5. பூண்டு- 2 பல்
6. இஞ்சி- 1 துண்டு
7. உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
9. சீரகம்- 1 தேக்கரண்டி
10. புளி- நெல்லிக்காய் அளவு
11. காயம் - சிறிது
12. உப்பு- தேவையான அளவு
தாளிக்க:
13. நல்லெண்ணய்- 1 தேக்கரண்டி
14. கடுகு- 1 தேக்கரண்டி
15. கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
16. உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
17. பெரிய வெங்காயம்- 1 எண்ணம்
18. முந்திரிப்பருப்பு (குருணை) - 1 தேக்கரண்டி
செய்முறை :
1. புதினா, மல்லித்தழை இலைகளை நன்றாக மண் போகச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுக்கவும்.
3. வறுத்த பருப்புடன் மிளகாய் வற்றல், காயம், புளி, உப்பு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி மல்லித்தழை, புதினாவையும் சேர்த்து ஒரு சுற்று கிளறி விட்டு ஆற விடவும்.
4. வதக்கியவற்றுடன் தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டுச் சிவக்க வதக்கவும்.
6. அரைத்தவற்றைப் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீர் உறிஞ்சும் வரை வதக்கி இறக்கவும்.
7. முந்திரிப்பருப்பை எண்ணெயில் வறுத்துக் கலக்கவும்.
8. உதிர் உதிராக வடித்த சாதத்தை ஆற விட்டுக் கலவையின் சூடு குறைந்ததும் கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.