சுண்டைக்காய் துவையல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சுண்டைக்காய் - 1 கைப்பிடி
2. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. தக்காளி (சிறியது) - 1 எண்ணம்
5. தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
6. புளி - சிறிது
7. பெருங்காயம் - சிறிது
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. உளுந்து - 1 தேக்கரண்டி
10. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சுண்டைக்காய்களை ஆய்ந்து கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பிறகு, அதனை நன்கு கழுவி, அதன் விதைகளை வெளியேற்றவும்.
2. பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து போட்டு சிவக்கத் தாளிக்கவும்.
4. அதனுடன் பெருங்காயம், மிளகாய் வற்றல் போட்டுப் பொரிந்ததும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
5. பின்னர் அதில் சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும். பாதி வதங்கி வரும் போது வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
6. முக்கால் பதம் வதங்கியதும் உப்பு, புளி சேர்த்துத் தேங்காய்த் துருவல் போடவும். அரைநிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.
7. ஆறியதும் தேவையான தண்ணீர் சேர்த்து துவையலாக அரைத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.