கறிவேப்பிலைத் துவையல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கறிவேப்பிலை – 2 கோப்பை
2. தேங்காய்த் துருவல் – 1/4 கோப்பை
3. மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
4. உளுத்தம் பருப்பு – 3 மேசைக்கரண்டி
5. கடலைப் பருப்பு – 1 மேசைக்கரண்டி
6. புளி – நெல்லிக்காய் அளவு
7. மல்லித்தழை – சிறிது
8. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
9. எண்ணெய் – தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. அதிகம் முற்றலில்லாத கறிவேப்பிலையாக உதிர்த்து 2 கோப்பை அளவு எடுத்து, நீரில் அலசி வடித்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் என்ற வரிசையில் சிவக்க வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு, புளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை லேசாக மட்டும் வதக்கிக் கொள்ளவும்.
4. கறிவேப்பிலைக் கலவையை தேங்காய்த் துருவல், தேவையான உப்பு, மல்லித்தழை சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும்.
5. எடுப்பதற்கு முன் வறுத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய், பருப்புகளைச் சேர்த்து, ஒன்றிரண்டாக உடைபட்டால் போதும் எனும் அளவில் அரைத்தெடுக்கவும்.
குறிப்பு:
* பயணங்களுக்கு தேங்காய் சேர்க்காமல் நன்றாகக் கறிவேப்பிலையை வதக்கி அரைத்துக் கொண்டால் கெட்டுப் போகாது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.