மாங்காய் மண்டி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அரிசி களைந்த கழநீர் - 2 கப்
2. கத்திரிக்காய் - 150 கிராம்
3. வெண்டைக்காய் - 150 கிராம்
4. உருளைக்கிழங்கு - 1 எண்ணம்
5. சின்ன வெங்காயம் - 50 கிராம்
6. பச்சை மிளகாய் - 10 எண்ணம்
7. மாங்காய் - 1/2 அல்லது 4 துண்டுகள்
8. தேங்காய் -1/2 மூடி
9. கொண்டைக் கடலை- 1/2 கப்
10. புளி -1 எலுமிச்சை அளவு
தாளிக்க:
11. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
12. கடுகு -1 தேக்கரண்டி
13. உளுத்தம்பருப்பு-1 தேக்கரண்டி
14. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
15. கறிவேப்பிலை - 2 கொத்து
கவனத்திற்கு:
1. இட்லி அரிசி 4 கோப்பை எடுத்து முதல் முறை இலேசாகக் கழுவி வடித்துவிட்டு, மறுமுறை நன்கு உரசி கழுவி மண்டியை வடித்து, வடிகட்டி அரிசி கழநீர் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
1. கொண்டைக்கடலையினை ஊற வைத்து, பின்னர் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. புளியை வெது வெதுப்பான நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
3. தேங்காயைச் சிறிதாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
4. வெண்டைக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயைச் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளிசம் செய்யவும்.
6. தாளிசத்தில் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெட்டிய காய்கள் சேர்த்து வதக்கவும்.
7. காய்கள் நன்கு வதங்கி வந்ததும், வேகவைத்த கடலை, அரிசி கழநீர், உப்பு, புளிச்சாறு சேர்த்து வேகவிடவும்.
8. காய் வெந்ததும், தேங்காய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
9. அனைத்தும் கெட்டியாக ஒன்று சேர்ந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.