எலுமிச்சை ஊறுகாய்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. எலுமிச்சம் பழம் – 10
2. கல் உப்பு – 1/4 கப்
3. மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் – 8 எண்ணம்
5. நல்லெண்ணெய் – 1/4 லிட்டர்
6. பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி
7. கடுகு – 1 தேக்கரண்டி
8. வினிகர் - தேவையான அளவு.
செய்முறை:
1. எலுமிச்சம் பழத்தில் 7 ஐ மட்டும் எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. எலுமிச்சம் பழத்தில் 3 ஐ எடுத்து அதிலிருந்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
3. சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு முதலில் நறுக்கிய எலுமிச்சம் பழத் துண்டுகளைப் போட்டு, அதன் மேல் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
4. பின்னர், அதனுடன் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சம் பழச் சாறைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
5. இப்படி கலந்த பின்பு அதை ஒரு சுத்தமான பாட்டிலுக்கு மாற்றி மூடி போட்டு வைக்கவும்.
6. பாட்டிலில் அடைக்கப்பட்ட எலுமிச்சைத் துண்டுகளைத் தினமும் ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.
7. சுமார் ஐந்து நாட்களில் எலுமிச்சம் பழத் துண்டுகள் உப்பில் நன்கு ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும்.
8. ஒரு வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிளகாய் வற்றலைப் போட்டு நன்கு வறுக்கவும்.
9. வறுத்த மிளகாய் வற்றலை ஆறியதற்குப் பின்பு அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும். மொறுமொறுப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.
10. அரைத்த மிளகாய்த்தூளை ஊறுகாயில் கலக்கவும்.
11. ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணையை ஊற்றிச் சூடு செய்து கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
12. கடுகு வெடித்ததும், கலக்கி வைத்துள்ள ஊறுகாயைச் சேர்த்து நன்கு கலந்து அப்படியே இறக்கவும்.
13. சூடு ஆறிய பின்பு, சுத்தமான ஜாடிக்கு ஊறுகாயை மாற்றி விடவும்.
14. ஊறுகாயில் உள்ள எண்ணெய், ஊறுகாய்க்கு மேலே சிறிது நிற்கும்படியாக இருக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.