தக்காளி ஊறுகாய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நன்கு பழுத்த தக்காளி - 1 கிலோ
2. மிளகாய் வற்றல் - 100கிராம்
3. புளி - 100கிராம்
4. நல்லெண்ணெய் - 100 மிலி
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. வெந்தயம் - 1 தேக்கரண்டி
7. பெருங்காயம் - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளியை நன்கு கழுவி ஈரம் போக துடைத்து அல்லது உலர வைத்து நீளவாக்கில் நான்கு துண்டுகளாக வெட்டி, உப்புப் போட்டு 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. மறுநாள் தக்காளிச் சாற்றைத் தனியாக ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதை அப்படியே சூரிய வெப்பத்தில் காய வைக்கவும்.
3. எஞ்சிய தக்காளியை ஒரு தட்டில் போட்டு சூரிய வெப்பத்தில் காய வைக்கவும்.
4. இரண்டும் நன்றாகக் காய்ந்ததும், எடுத்து ஒன்றாக்கிக் கொள்ளவும்.
5. அதன் பின்பு, அதில் மிளகாய் வற்றலைக் காம்பு நீக்கிச் சேர்க்கவும். அத்துடன் புளியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
6. பின்னர் அதை மிக்ஸியில்/உரலில் போட்டு அரைத்துக் கொள்ளவும். (தேவையெனில் சிறிது சுடுநீர் சேர்த்துக் கொள்ளவும்)
7. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகுப் போட்டு பொரிந்ததும், அரைத்து வைத்திருக்கும் தக்காளி, மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
8. எண்ணெயும், தக்காளி விழுதும் ஒன்றோடு ஒன்றாகச் சேர்ந்த பின்பு இறக்கி ஆற வைக்கவும்.
9. ஒரு வாணலியில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தைப் போட்டு வறுத்து பொடிக்கவும்.
10. பொடித்தவற்றை ஆற வைத்த ஊறுகாய்க் கலவையில் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
11. அதன் பின்னர் அந்த ஊறுகாயைக் குறைந்தது எட்டு மணி நேரம் சூரிய வெப்பத்தில் காய வைத்துக் கொள்ளவும்.
12. அதன் பிறகு, தக்காளி ஊறுகாயை 20 முதல் 30 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.