பூண்டு ஊறுகாய்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பூண்டு - 1 கப்
2. புளி - நெல்லிக்காய் அளவு
3. கடுகு - 1 தேக்கரண்டி
4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 3/4 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் - சிறிது
7. நல்லெண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. தோலுரித்த பூண்டிதழ்களை நுனியை நறுக்கி எடுத்து வைக்கவும்.
2. வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும், வெறும் வாணலியில் கடுகு, வெந்தயம் இரண்டையும் தனித்தனியாகக் தீய்ந்து விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
3. வறுத்து வைத்த கடுகு, வெந்தயம் ஆறியதும் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
4. தோலுரித்த பூண்டில் மூன்றில் இரண்டு பங்கெடுத்து, அதைப் புளியுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. வாணலியில் நல்லெண்ணெய் (சிறிது கூடுதலாகச் சேர்க்கவும்) ஊற்றிக் காய்ந்ததும், மீதமுள்ள ஒரு பங்கு பூண்டைப் போட்டுச் சிறிது நேரம் வதக்கவும்.
6. பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்துக் கிளறவும்.
7. பூண்டின் பச்சை வாசம் போகும்வரை அடிப்பிடித்து விடாமல் வதக்கவும்.
8. எண்ணெய் பிரிந்து வரும் போது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
9. பெருங்காயம் மற்றும் பொடித்து வைத்துள்ள கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
10. நன்றாக ஆறிய பிறகு, கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு, தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.