காலிஃபிளவர் ஊறுகாய்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காலிஃபிளவர் - 1 எண்ணம்
2. வெந்தயம் - 2 தேக்கரண்டி
3. கடுகு - 2 தேக்கரண்டி
4. பூண்டு- 10 பற்கள்
5. மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள்- 4 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய்- 4 தேக்கரண்டி
8. தூள் உப்பு - தேவையான அளவு
9. எலுமிச்சை - 1 எண்ணம்
செய்முறை:
1. காலிஃபிளவரின் அடிப்பகுதியை நீக்கி விட்டு, சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.
3. அதனுடன் நறுக்கி வைத்த காலிஃபிளவரை சேர்த்து 2 நிமிடம் கொதித்த பிறகு, இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் வெந்தயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
5. அதே கடாயில் 2 ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விட்டு வறுத்து எடுக்கவும்.
6. வறுத்த வைத்த வெந்தயம் மற்றும் கடுகினை தனித்தனியாக மிக்ஸி ஜாரில் சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
7. ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும், அதில் உரித்த பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும்.
8. அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், பொடியாக அரைத்த வெந்தயத் தூள் மற்றும் கடுகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய்யில் நன்றாகக் கலந்து விடவும்.
9. அடுப்பைக் குறைவான நெருப்பில் வைத்து சுத்தம் செய்து வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு இறக்கி விடவும்.
10. கடைசியாக, அதில் எலுமிச்சைச் சாற்றினை சேர்த்து 3 மணி நேரம் வரை ஊற வைத்து எடுத்துப் பயன்ப்டுத்தலாம்.
குறிப்பு:
ஊறுகாயைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.