பாம்பே கொழுக்கட்டை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 2 கப்
2. மைதா மாவு - 1/2 கப்
3. நாட்டுச்சர்க்கரை - 1 கப்
4. தேங்காய்த் துருவல் - 1 கப்
5. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
6. நெய் - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து இருபது நிமிடம் வரை வைத்திருக்கவும்.
2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றிக் காய்ந்ததும், குறைவான நெருப்பில் தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கித் தனியாக வைக்கவும்.
3. ஒரு கிண்ணத்தில் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டுக் கிளறித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கிக் கையால் தட்டையாகத் தட்டி, அதன் நடுவே தேங்காய்க் கலவையை சிறிது வைத்து, மடித்து மூடிக் கொள்ள வேண்டும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.