இனிப்பு பிடி கொழுக்கட்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கிலோ
2. கருப்பட்டி - 1 கிலோ
3. சிறு பருப்பு - 100 கிராம்
4. ஏலக்காய் - 10 எண்ணம்
5. தேங்காய் பற்கள் - 1 கைப்பிடியளவு
6. தேங்காய் எண்ணெய் - 1 கரண்டி
செய்முறை:
1. பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரத்தி காய வைத்துக் கொள்ளவும்.
2. பின்னர் காய்ந்த அரிசியை மிக்ஸியில் போட்டு திரித்து, அதனை சல்லடையில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
3. பின்னர் இந்த மாவை இரும்புச் சட்டியில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
4. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் போது அதில் அச்சு வெல்லத்தை தட்டி போட்டு பாகு காய்ச்சவும்.
6. பாகு கொதித்து வரும் போது அதில் ஏலக்காய்களை நுணுக்கி போட்டு, பாகை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
7. இப்போது ஒரு இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சிறு பருப்பையும், தேங்காய் பற்களையும் போட்டு மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
8. இப்போது வறுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை எடுத்துக் கொண்டு அதில் நாம் தயாராக வைத்துள்ள வெல்ல பாகை ஊற்றி, வறுத்து வைத்துள்ள சிறுபருப்பு மற்றும் தேங்காய் பற்களை சேர்த்து நன்றாகக் கிளறி கட்டியாக பிசைந்து கொள்ளவும்.
9. இப்போது அந்த மாவை உருட்டி கைகளால் கொழுக்கட்டையாக பிடித்து, இட்லி தட்டில் வைத்து நீராவியில் அவித்து எடுக்கவும்.
குறிப்பு:
இனிப்பு பிடி கொழுக்கட்டைக்கு கருப்பட்டிதான் சுவையாக இருக்கும். கருப்பட்டிக்குப் பதிலாக வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.