மக்காச்சோள ரவை கொழுக்கட்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மக்காசோள ரவை - 1 கிண்ணம்
2. கடுகு - 1 தேக்கரண்டி
3. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
4. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
6. கறிவேப்பிலை - சிறிது
7. பெருங்காயம் - சிறிது
8. தேங்காய் துருவல் - 1/2 கப்
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு 3 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
2. நன்றாகக் கொதி வந்ததும், பெருங்காயத்தைத் தண்ணீரில் கரைத்துவிட்டு, தேங்காய்த் துருவல், உப்பு போட்டுக் கொதிக்க விடவும்.
3. தண்ணீர் கொதித்ததும் சோள ரவையைப் போட்டு நன்றாகக் கிளறி மூடி வைக்கவும்.
4. இந்த ரவை வேக தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளும்.
5. அடுப்பை குறைவான நெருப்பில் வைத்து, அடிக்கடி திறந்து கிளறி விடவும்.
6. மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
7. ஆறிய மாவு பிடிக்கும் பதத்தில் வந்ததும் கொழுக்கட்டைகள் பிடித்து, இட்லி சட்டியில் வைத்து ஆவியில் 12 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு:
இக்கொழுக்கட்டைக்குத் தொட்டுக் கொள்ள சின்ன வெங்காய சட்னி நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.