வேர்க்கடலை சுண்டல்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. வேர்க்கடலை - 2 கோப்பை
2. நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
3. கடுகு - 1 தேக்கரண்டி
4. உளுந்து - 1 மேசைக்கரண்டி
5. சோம்பு - 1 தேக்கரண்டி
6. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
8. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
9. இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
10. பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
11. மஞ்சள் பொடி - ½ தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது
13. தேங்காய்த் துருவல் - சிறிது
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் 5 கோப்பை தண்ணீர் ஊற்றி, அதில் வேர்க்கடலையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் ஊற வைத்த கடலையைப் போட்டு குழைந்து விடாமல், நன்றாக வேக வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்துப் பொறிந்ததும், சோம்பு, வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
4. அத்துடன் உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
5. உளுந்து பொன் நிறமானதும், அதில் இஞ்சி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
6. கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து, அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.
7. வேக வைத்து நீரை வடித்து வைத்திருக்கும் வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறவும்.
8. கடைசியாக, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.