பட்டாணி மசாலா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளைப் பட்டாணி - 1 கப்
2. தக்காளி - 1எண்ணம் (பெரியது)
3. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
4. பட்டை - சிறு துண்டு
5. கிராம்பு - 2 எண்ணம்
6. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
7. மல்லி - 1 மேசைக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
9. சோம்பு - 1 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பட்டாணியை முதல் நாள் இரவில் ஊற வைக்கவும்.
2. ஊறிய பட்டாணியை நன்றாகக் கழுவி, அதனுடன் 2 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
3. ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்றொரு வெங்காயம், தக்காளியை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை விட்டு, அதில் மிளகாய், மல்லி, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
5. அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பெரிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. பின்னர் அத்துடன் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
7. பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள மிளகாய், மல்லி, பட்டை, கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சேர்க்கவும்.
8. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
9. வெங்காயம் சற்று வதங்கியவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய், வெங்காய விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சற்று வதக்கவும்.
10. பின்னர் வேக வைத்துள்ள பட்டாணியை வெந்த நீருடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
11. கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.