காய்கறி சமோசா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மைதா - 2 கிண்ணம்
2. உருளைக் கிழங்கு - 2 எண்ணம்
3. பச்சை பட்டாணி - 1/2 கிண்ணம் (கேரட், பீன்ஸ் என்று விரும்பும் வேறு சில காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்)
4. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
5. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
6. வெங்காயம்-1 எண்ணம்
7. சீரகம்- 1/4 தேக்கரண்டி
8. உப்பு - 3/4 தேக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா, கால் தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துச் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டுச் சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
2. பிசைந்த மாவை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் வரை ஊற விட வேண்டும்.
3. வேகவைத்த உருளைக்கிழங்குடன் பச்சை பட்டாணி போட்டு நன்கு ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
4. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம் போட்டுப் பொரிந்ததும் நீளமாக வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கியதும் அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்துக் கிளறி, அதில், பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு கிளறவும்.
6. ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி,அதை வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும். பின் அதை அரைவட்டமாக வெட்டி, அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
7. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நாம் தயாரித்து வைத்துள்ள சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.