வெங்காய சமோசா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு - 1/4 கிலோ
2. பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
3. சோம்பு - 1 தேக்கரண்டி
4. மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
5. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கருவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கித் தனியே வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
3. சிறிது நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
4. ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெல்லியதாக தேய்த்து அதன் மேல் மாவைத் தூவவும்.
5. இன்னொரு உருண்டையும் எடுத்து இதே போல் தேய்த்து அதன் மேல் வைத்து மறுபடியும் நன்கு மெல்லியதாக தேய்க்கவும்.
6. தேய்த்தவைகளைத் தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு தனியே எடுத்து விடவும்.
7. அதைக் கத்தியால் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
8. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சோம்பு,நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,மல்லித்தழையைச் சேர்த்து இலேசாக வதக்கவும்.
9. பின்னர் அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி,அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
10. நீளவாக்கில் நறுக்கி வைத்த மைதாத் துண்டை எடுத்து முக்கோண வடிவில் மடித்து, அதில் ஆற வைத்த வெங்காய மசாலாவை உள்ளே வைத்து மூடிவிடவும்.
11. மூடுவதற்குத் தண்ணீர் அல்லது மைதா மாவுப் பசையைப் பயன்படுத்தலாம்.
12. வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அதில் நாம் முன்பே தயார் செய்து வைத்துள்ள சமோசாவைப் போட்டு பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.