பாதுஷா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. மைதா - 1/2கிலோ
2. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
3. சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
4. டால்டா - 200 கிராம்
5. ஏலப்பொடி (பொடித்தது) -1 தேக்கரண்டி
செய்முறை:
1. டால்டா, பேக்கிங் பவுடர், சோடா உப்பு, ஏலம் இவற்றைக் கலந்து நன்றாகத் தேய்த்துக் கலக்கவும். பின் மைதா மாவு கலந்து தண்ணீர் விட்டு நன்றாகப் பிசையவும். பின் உருண்டையை எடுத்து ஒரேப் பக்கமாகச் சிறிது
நேரம் உருட்டிப் பின் தட்டையாக்கி நடுவில் பெருவிரலால் அமுக்கி தட்டில் செய்து வைக்கவும். விரிந்த வாணலியில் டால்டாவைச் சிறிது விட்டுச் சூடேற்றவும். சிறிது சூடேற்றிய உடன் (கையில் தொடுமளவு சூடு) வாணலியைக் கீழே இறக்கி பிறகு சிறிது டால்டா விடவும்.
2. செய்த பாதுஷாக்களை வாணலியில் வரிசையாக அடுப்பில் தூக்கி வைக்கவும். தீ மிதமாக இருந்தால் நல்லது. பாதுஷா வடைபோல் மிதக்க ஆரம்பித்தவுடன் கம்பியினால் திருப்பிப் போடவும். இலேசாக சிவந்தவுடன் எடுத்து தனியாக தட்டில் ஆறவைக்கவும். வாணலியை மறுபடி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து, டால்டாவை ஆறவிடவேண்டும்.
3. சிறிது ஆறியதும் மறுபடி அதில் புதிய டால்டா சிறிது விடவும். உடனே பாதுஷாக்களை அதில் அடுக்கி அடுப்பில் வைத்து மறுபடி சூடேற்றவும்.இவ்விதம் ஒவ்வொரு தடவையும் டால்டாவை கீழே இறக்கி ஆறவைப்பதும் புதிய டால்டா சேர்ப்பதும் மிகமிக முக்கியம்.
4. பின்பு,சீனியை தண்ணீர் விட்டு இளம்பாகு காய்ச்சி, ஆறிய பாதுஷாக்களைப் போட்டு எடுக்கவும். இரண்டாவது தடவை அதே சீனிப்பாகை கையில் ஒட்டும் பதமாகக் காய்ச்சி, அதில் பாதுஷாக்களை போட்டு எடுக்க வேண்டும்.
5. பின் மூன்றாவது முறை வெள்ளை நிறம் வரும் வரைப் பாகைக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். வெள்ளை நிறம் வந்தவுடன் மறுபடி பாதுஷாக்களை கையினால் அதில் தோய்ந்து எடுத்து தட்டில் ஆற வைத்தால் மேலே வெள்ளை நிறமாக இருக்கும்.
6. அழகிற்கு மேலே கலர் தேங்காய்ப்பூ தூவலாம்.அதன் நடுவில் ஆறிய சீனிப்பாகை தோய்ந்தவுடன் உள்ள பள்ளத்தில் முந்திரிப்பருப்போ, கிஸ்மிஸ் பழம் ஒன்றோ வைக்கலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.