பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது சரியா?
பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது பழம் நம்பிக்கை. இன்னும் கூட சில கிராமங்களில் இந்நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த நம்பிக்கை உண்மைதான்.
பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஹார்மோன் செயல்பாட்டினால் உடற்பாகங்களைப் போலவே அவர்களது தலைமுடியும் சற்று கூடுதலாகவே வளர்கிறது. இது குழந்தைப் பிறப்புக்குப் பின்பும் மூன்று மாத காலத்திற்குத் தொடரும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஹார்மோன் செயல்பாடுகள் குறைந்து பழைய நிலைக்கு மாறும். இந்தக் காலத்தில் அவர்களுக்கு தலை முடி இயற்கையாகவே சிறிது உதிரத் தொடங்கும்.
குழந்தை பிறந்து மூன்று மாத காலத்திற்குப் பிறகுதான் சிரிக்கத் தொடங்கும். இதைக் கணக்கில் கொண்டுதான் மேற்கண்ட நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
பிறந்த குழந்தை தாயின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாலும் சிரிக்கா விட்டாலும் மூன்றுமாதத்திற்குப் பின்பு முடி கொட்டும் என்பதே உண்மை.
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பது சரியா?
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்றும் அவர்கள் கடவுள் தரிசனம் செய்யக் கூடாது என்றும் ஒரு நம்பிக்கை இந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஏன் தெரியுமா?
மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடல் வெப்பம் மாற்றமடைகின்றது. இக்காலங்களில் சிறு வெப்ப மாற்றத்தைத் தாங்க முடியாத கருவேப்பிலை போன்ற சில செடிகள், புழுக்கள் போன்றவை பாதிப்படைகின்றன.
பட்டுப்பூச்சிகள் புழுவாக இருக்கும் போது வலை பின்னிக் கொண்டு அதனுள் பாதுகாப்பாக இருக்கின்றன. இந்த இடங்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சென்றால் அந்தப் புழுக்கள் மரணமடைந்து விடுகின்றன.
கோயிலில் கர்ப்பக் கிருகத்தில் இருக்கும் கடவுள்களுக்கான ஜீவசக்தியும் பட்டுப் பூச்சிகளுக்கான புழுக்களைப் போன்றுதான் என்று இந்து சமயத்தினர் கருதுகின்றனர்.
இதனால்தான் கடவுளுக்கான சக்தி பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று அனுமதி மறுக்கின்றனர்.
காகம் கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது சரியா?
காகம் கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கை இந்து சமயத்தினரிடயே உள்ளது. இது உண்மையா?
காகங்களை முன்னோர்களாகக் கருதி அவைகளுக்கு உணவு படைக்கும் வழக்கம் இந்து சமயத்தினரிடையே ஒரு வழக்கமாக இருக்கிறது. மேலும் காகம் கத்தும் திசைக்குக் கூட முக்கியத்துவமும் அளிக்கின்றனர்.
காகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்பது உண்மையல்ல. விருந்தினர் வந்தால் காகம் கத்தும் என்பதன் உருமாற்றமே இந்தச் செய்தி.
விருந்தினர் வந்தால் நிறைய உணவு வகைகள் தயாரிப்பார்கள். இப்படி தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் மிச்சமிருந்தால் அதைக் காகத்திற்கு அளிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் “விருந்து கழிந்தால் காகம் கத்தும்” என்று சொல்லப்பட்டது.
காலப்போக்கில் காகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்கிற நிலைக்கு மாறிப் போய்விட்டது என்பதுதான் இங்கு உண்மை.
முன்னதாகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகப் பேசும் என்பது சரியா?
முன்னதாகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகப் பேசும் என்கிற நம்பிக்கை நம் நாட்டிலுள்ளது.
குழந்தையின் மழலைப் பேச்சைக் கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் அந்தக் குழந்தை வீட்டார்க்கு மட்டுமல்ல. அண்டை வீட்டார்க்கும் உண்டு.
சில குழந்தைகளுக்கு முன்னதாகப் பல் முளைக்கும். சில குழந்தைகளுக்கு தாமதமாகப் பல் முளைக்கும். முன்னதகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகவே பேசுகின்றன.
இதற்குக் காரணமென்ன?
பேசுவதற்குப் பயன்படும் முக்கிய உறுப்பு நாக்கு. முன்னதாகப் பல் முளைத்து பற்கள் கூடும் போது பேச முற்படும் குழந்தையின் நாவிற்கு புதிதாக முளைத்த பற்களால் சில தடைகள் ஏற்படுகின்றன.
இதனால்தான் குழந்தைகள் தாமதமாகவே பேசுகின்றன.
குடும்பப் பெண்கள் குங்குமம் அணிவது அவசியம் என்பது சரியா?
இந்து சமயக் குடும்பப் பெண்கள் குங்குமம் அணிவது அவசியம் என்கிற ஒரு நிலை உள்ளது. இன்றைய நாகரீகக் காலத்திலும் இது அனைத்துப் பெண்களாலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஏன்?
திருமணம் முடிந்த பெண்கள் தலைமுடியைச் சீவி அதை இரண்டாக வகுத்து அதற்கு நடுவில் நெற்றிக்கு மேற்புறமாக குங்குமம் வைத்துக் கொள்கின்றனர்.
தான் திருமணமானவள். தன் மேல் பிற ஆண்கள் ஆசை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதற்காக திருமணமான பெண்கள் இப்படி குங்குமம் வைத்துக் கொள்கின்றனர் என்று சிலர் கூறுகின்றனர்.
இந்து சமய விதிப்படி பெண்கள் தலை முடியை வகுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், திருமணமான பெண்கள் தன் கன்னித்தன்மை ஒருவரால் அழிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காகக் தலை முடி வகுப்பின் தொடக்கத்தில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.