கேள்வி கேட்டால் என்ன சொல்ல வேண்டும். இதென்ன கேள்வி? பதில் தான் சொல்ல வேண்டும். ஆனால், கேட்ட கேள்விக்கு வாய் திறந்து பதில் சொல்லாமல், வேறு விதமாய்ச் சொன்னார் ஒருவர். யார் அவர்?
உலகிற்கே ஒன்றரை அடி வரிகளில் உபதேசம் செய்த நம் தெய்வப்புலவர் வள்ளுவர்தான்.
வள்ளுவர் பற்றி எத்தனையோ செய்திகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இது முற்றிலும் வித்தியாசமான செய்தி.
அவருக்கும் வாசுகிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடாயிற்று. வாசுகியின் தந்தை மார்க்க சேயோன், வள்ளுவரின் பரம ரசிகர். அவரது எழுத்துக்கள் சேயோனை மிகவும் கவர்ந்தன. ‘இந்த வள்ளுவனே, தனது மகளுக்கு கணவனாக வாய்த்தால், அவளது வாழ்வும் கவிதை போல் இனிக்குமே’ என்று நினைத்தார். நினைத்ததை முடிக்கும் வேளை வந்தது. ஆனால், வள்ளுவர் விடாக்கண்டனாயிற்றே. பெண் பார்க்கச் சென்ற இடத்தில், மணமகளுக்கு ஒரு சோதனை வைத்தார்.
‘பாட்டு பாடு, ஆட்டம் போடு’ என்றெல்லாம் போட்டி இல்லை. ஒரு பிடி மண்ணை எடுத்தார். அந்தப் பெண்ணிடம், கொடுத்து, ‘இதைச் சமைத்துச் சோறாக்க முடியுமா?’ என்றார்.
வாசுகி யோசிக்கவில்லை. அடுப்படிக்குச் சென்றாள். மணல் சோறானது. எடுத்து வந்து ‘சாப்பிடுகிறீர்களா?’ என்றாள்.
அசந்து விட்டார் வள்ளுவர். கற்புத்திறனுள்ள ஒரு பெண் எதையும் சாதிப்பாள் என்பதை உணர்ந்தார்
.
‘பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்’
என்ற குறள் வரிகள், அப்போது தான், அவர் மனதில் பதிவாகியிருக்க வேண்டும்.
கற்புத்திடமுள்ள ஒரு பெண் மட்டும் கிடைத்து விட்டால், அதை விடப் பெற வேண்டிய ஒன்று ஏதுமில்லை என்பது இதன் பொருள்.
பிறகென்ன, மணவிழா சிறப்பாக நடந்தது.
புது மணமக்கள் இனிய இல்லறம் நடத்தி வரும் வேளையில், வள்ளுவரின் வீட்டுக்கு வந்தார் ஒரு விருந்தினர். வள்ளுவரும் அவரும் உரையாட ஆரம்பித்தனர்.
“வள்ளுவரே! துறவறம் உயர்ந்ததா, இல்லறம் உயர்ந்தா?” இதுதான் வந்தவரின் சந்தேகம்.
ஒரு புதுமாப்பிள்ளையிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது? வள்ளுவர் சிரித்துக் கொண்டாரேத் தவிர, பதில் ஏதும் சொல்லவில்லை.
திடீரென ‘வாசுகி’ என சத்தமாகக் குரல் கொடுத்தார் வள்ளுவர்.
அப்போது, வாசுகி கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். ஒரு மர வாளியில் தண்ணீர் நிறைய இருந்தது. கிட்டத்தட்ட மேலே வந்து விட்டது. கயிறை அப்படியே விட்டு விட்டு, “என்னங்க!” என்றபடியே ஓடி வந்தாள், வாசுகி.
தண்ணீர் வாளி எந்த நிலையில் இருந்ததோ, அப்படியேக் கிணற்றில் நின்றது. உள்ளே விழவில்லை. கணவன் கூப்பிட்ட குரலுக்கு, “கொஞ்சம் பொறுங்க! தண்ணீர் இறைத்து விட்டு வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல், எந்த ஆட்சேபமும் இல்லாமல் ஓடி வந்தாளே! அதுதான் இனிய இல்லறம்.
உள்ளே வந்தவள், இருவருக்கும் வாழை இலையில் உணவு பரிமாறினாள். வள்ளுவரின் இலையிலிருந்து சில பருக்கைகள் கீழே விழுந்தன. அவரது இலை முன், ஒரு மரக்குச்சியும், ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் இருந்தது. ஏன் இப்படி வைக்கச் சொல்கிறார் என்பதற்கான காரணத்தை வந்தவரும் கேட்கவில்லை. வாழ வந்த நாளிலிருந்து, வாசுகியும் கேட்டதில்லை. இருந்தாலும் விருந்தினர், அவளது முகத்தை நோக்க, “அவருக்கு முதல் முறையாகப் பரிமாறும் போது, தண்ணீர் கிண்ணமும், குச்சியும் வைக்கச் சொன்னார். அதைச் செய்கிறேன்” என்று மட்டும் பதிலளித்தாள்.
இன்னொரு நாள், வள்ளுவர் பட்டப்பகலில் தன் வீட்டுத் தறியில் துணி நெய்து கொண்டிருந்தார். அப்போது தறியின் குறுக்கும் நெடுக்குமாக நூலை எடுத்துச் செல்லும் கருவி கீழே விழுந்து விட்டது.
“வாசுகி, அந்த விளக்கை எடுத்து வா!” என்றார் வள்ளுவர்.
பட்டப்பகலென்றும் பாராமல், விளக்கேந்தி வந்தாள் அந்த காரிகை. “கருவி விழுந்து விட்டது. அதைத் தேடவே விளக்கைக் கொண்டு வரச் சொன்னேன்,” என்றார்.
“பட்டப்பகலில் உமக்கு கண் தெரியவில்லையா?” என்றெல்லாம் பேசவில்லை அவள். சொன்னதைச் செய்தாள். விருந்தினர் அசந்து விட்டார்.
“இல்லறம் தான் உயர்ந்தது, பொறுமையான மனைவி அமைந்து விட்டால்...” என்ற பதில், வள்ளுவர் சொல்லாமலேயே அவருக்கு விளங்கி விட்டது.
விடை பெற்று ஊருக்கு கிளம்பி விட்டார், விருந்தினர்.
வாசுகியின் இறுதிக்காலம்..அவள் மரணப்படுக்கையில் இருந்தாள்.
“அன்பே! நான் உனக்கு ஏதாவது குறை வைத்தேனா? ஏதாவது திட்டினேனா? என்னிடம் ஏதாவது கேட்க வேண்டியுள்ளதா?” என்றார் வள்ளுவர்.
“உங்களுடன் வாழ்ந்த காலம் பொற்காலம். ஒன்றே ஒன்றுக்கு மட்டும் தான் விடை தெரியவில்லை. நீங்கள் சாப்பிடும் போது, குச்சியும், தண்ணீரும் ஏன் கொண்டு வர சொன்னீர்கள்? பதில் கிடைக்குமா?” என்றாள்.
“வேறொன்றுமில்லை. அன்னம் பரப்பிரம்மம். உணவு கடவுளுக்கு சமமானது. அதை வீணாக்கக் கூடாது. அது தரையில் விழுந்தால், மணல் ஒட்டியிருக்கும். அதை நீரில் நனைத்துச் சுத்தமாக்கிச் சாப்பிட நினைத்தேன். ஆனால், அதற்கு ஒருநாள் கூட வேலையே இல்லாமல், நீதான் சிந்தாமல் சிதறாமல் பரிமாறினாயே! பொறுப்புள்ள மனைவியல்லவா நீ” என்று வாய் தழுதழுக்கச் சொன்னவர், கண்ணீர் வடித்து விட்டார்.
புன்னகையுடன், அவளது ஆவி பிரிந்து விட்டது.
அவள் இறந்ததும் குறள் அல்லாத ஒரு கவிதை எழுதினார் வள்ளுவர்.
“அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதாய் என் தூங்கும் என் கண் இரவு”
இந்தக் கவிதையில், ‘படி சொல்லா, பதி சொல்லா’ என்ற சந்தேகம் தேவையில்லை. “நான் சொன்னபடி செய்யத் தவறாதவளே’ என்பதே இதன் பொருள்.
திருமண விழாக்களில், ‘வள்ளுவனும், வாசுகியும் போல் வாழ்க’ என்று மணமக்களை வாழ்த்துகிறார்களே! அதற்குக் காரணம் இந்த நிகழ்வுகள்தான்.
வள்ளுவர் 133 அதிகாரம் எழுதியதற்காக, அவருக்கு சிலை வடித்தார்களோ இல்லையோ... அவர் நடத்திய இல்லறத்துக்காகவே அவருக்கு நாடெங்கும் சிலை வைக்க வேண்டும். தனியாக அல்ல... அவரது துணைவியாருக்கும் சேர்த்து... குமரிக்கடலில், வள்ளுவர் அருகே வாசுகிக்கும் சிலை வடித்து, அவரது இல்லற வாழ்வையும் கல்லில் வடித்து வையுங்கள். இந்திய இணைகளின் மன வீட்டில் இவர்கள் என்றும் தங்கியிருப்பார்கள். நெஞ்சில் நிறைந்திருப்பார்கள்.