உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சுவாசப் பாதிப்பால், தலைவலி, தும்மல், இருமல், காய்ச்சல் ஏற்பட்டு துன்பப்படுகின்றனர். சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து போய்விடுகின்றனர். இதற்கு மூச்சுப்பாதை மற்றும் சுவாச உறுப்புகளில் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இந்தப் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள ஆயுர்வேத மருத்துவத்தில் ‘நசியம்’ எனப்படும் மூக்குத்துளி மருத்துவம் உதவுகிறது. இந்த நசியம் எனும் மூக்குத்துளி மருத்துவச் செயல்முறை உணர்வு உறுப்புகளை (Sense Organs) கூர்மைப்படுத்த உதவும்.
நஸ்யம் செயல்முறையை 7 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் எளிதாகச் செய்யமுடியும்.
நசியம் எனும் மூக்குத்துளி மருத்துவத்தை எப்படி செய்வது?
1. முகம் மற்றும் கழுத்தில் எண்ணெய் (நல்லெண்ணெய் அல்லது தேங்காயெண்ணெய்) கொண்டு மேல்நோக்கியபடி ஒரு நிமிடம் தடவவும்.
2. இரண்டு நிமிடம் சூடான நீரைப் பயன்ப்படுத்தி, நீராவி பிடிக்கவேண்டும். நீராவி பிடிக்கையில் உங்கள் கண்களுக்கு ஈரமான துணியை கட்டிகொள்ளுங்கள்.
3. ஒரு துண்டை உருட்டித் தோள்களின் கீழ் வைக்கவும், இதனால் உங்கள் தலை சற்று குறைந்த நிலையில் இருக்கும்.
4. பருத்தித் துணி அல்லது துளிசாட்டியில் (dropper) நசியத்திற்குப் பயன்படுத்தும் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.
5. ஒரு நாசி துவார்த்தில் இரண்டு சொட்டு விடுகையில் மற்றொரு நாசி துவார்த்தை மூடவும்.
6. மறுபுறமும் இதைப் போன்றே செய்ய வேண்டும்.
7. நீங்கள் மெதுவாக உங்கள் வலது அல்லது இடது பக்கம் திரும்பி வெளியேறும் சளியை முழுமையாக வெளியேற்ற (உமிழ) வேண்டும்.
8. பிறகுகு சுடுநீரில் வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நசியம் மருத்துவத்திற்கு எந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்?
1. அணு தைலம்(Anu tailam)
2. பாதாம் எண்ணெய்(Almond oil)
3. மாஷாதி தைலம்(Maashadi tailam)
4. நல்லெண்ணெய்(Gingely oil)
5. பசும்பால் அல்லது ஆட்டுப் பால்
நசியம் மருத்துவச் செயல்பாட்டை எந்த நேரத்தில் செய்யவேண்டும்?
காலை வேளையில் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துச் செய்திட வேண்டும்.
நசியம் செயல்முறையால் கிடைக்கும் மேலும் சில நன்மைகள்
1. தோல் மற்றும் முகத்தில் நல்ல நிறம் ஏற்பட்டுப் பொலிவு பெறும்.
2. கண்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.
3. தலைமுடி நரைப்பதை தடுக்கும்.
4. நாசி மற்றும் நாக்கின் வறட்சியைக் குறைக்கும்.
5. ஒற்றைத் தலைவலி(Migraine) மற்றும் கழுத்துப்பகுதிக்கான தண்டுவட எலும்புப் பாதிப்புக் (Cervical Spondylosis) குறைபாடுகள் குறையும்.