மனிதர்கள் பற்களில் பச்சை குத்துதல், சாயம் பூசுதல் போன்ற நம்பிக்கைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்க, மாயஜால மந்திர வித்தைகள் மற்றும் பில்லி சூன்யம் எனப்படும் செய்வினைச் செயல்களிலும் மனிதப் பற்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் மனிதப் பற்களை வைத்து சூன்யமும் மாந்திரீகமும் நடந்திருக்கின்றன.
* குழந்தைகளைச் சூன்யக்காரிகளிடமிருந்து காப்பாற்ற, விழுந்த பால் பற்களை எரித்தனர் அல்லது புதைத்தனர்.
* பால்கன் நாகரிகத்தில் குழந்தையின் பற்களைப் பொம்மையின் மீது பதித்தனர். அதன் மூலம் மனிதர்களின் எண்ணங்களையும் செயல்களையும் கட்டுப்படுத்தியதாக நம்பினர்.
* ஜப்பானியர்கள் சடங்குகளில் பற்களைப் பயன்படுத்தினார். அதன் மூலம் நோய்களையும் பற்சொத்தைகளையும் தடுத்ததாக நம்பினர்.
* பற்களை வைத்து வேண்டாத மனிதர்களைச் சாபங்களால் சபித்தனர். ஒரு மனிதனைத் தனக்குக் கீழ் அடிமையாக்கினர்.
* துர் ஆவிகளிடமிருந்து குழந்தைகளை பாதுகாத்தனர்.
* நோர்ஸ் பண்பாட்டில் போர்களை வென்றெடுக்க சிறுவர் சிறுமியர் பற்கள் பயன்படுத்தப்பட்டன.
* தென்னாப்பிரிக்கக் பண்பாட்டில் குழந்தைகளின் பற்கள் காலணியில் பதிக்கப்பட்டன.
* ந்யூரிட் கர்வின் புத்தகத்தில் சூன்யக்காரிகள் குழந்தைகளின் பற்களை தலையணைக்கு அடியிலிருந்து சேகரிக்கத் துடைப்பக் கட்டையில் பறந்தனர்.
பல் கவிதை
* உன்
ஜில்லியன் டாலர் புன்னகையைத்
திருடிக் கொண்ட பிறகு
தூக்கம் தொலைந்து போனது
திரும்பித் தர வருகிறேன்
என்னை விடுதலை செய்வாயா?
- முகமது பாட்ஷா
|
சர்ஜி (Circe), வில்லோ (Willow), தபிதா (Tabitha), அரோரா (Aurora), எஸ்மெரல் டா (Esmeral daa), உர்சுலா (Ursula) என்று பெண் சூன்யக்காரிகளும், ஆண் சூன்யக்காரர்களில், ஜெர்மனியில் ட்ரட்னர் (Drudner), பிரெஞ்ச்சில் கிராமரே (Gramar ye ), கிரேக்கத்தில் கல்லிகராட்ஸ் (Kalli krates), ஆங்கிலத்தில் மேகே (Mage), லத்தீனில் மேலிபிகஸ் (Maleficus) என்று பல சூன்யக்காரர்கள் இருந்திருக்கின்றனர்.
சீனாவிலும், வியட்னாமிலும் குழந்தைகள் தங்களின் விழுந்த பற்களைக் கூரை மீது வீசினர். இந்தியாவிலும் இப்பழக்கம் இருந்து வருகிறது. டென் யெல்லா பண்பாட்டு மக்கள் விழுந்த பற்களை மர உச்சியில் பதுக்கினர்.
மேற்கத்தியப் பண்பாட்டில் இரு கற்பனை கதாபாத்திரங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவர். ஒன்று, கிறிஸ்துமஸ் தாத்தா. இவரின் உண்மையான பெயர் செயின்ட் நிக்கோலஸ். இவருக்கு சின்டி கிளாஸ் என்கிற பெயரும் உண்டு.
சிவப்பு உடை வெள்ளை தாடி கருப்பு கச்சை அணிந்து கலைமான்கள் பூட்ட்ப்பட்ட வண்டியில் கிறிஸ்மஸ் தாத்தா பயணித்து டிசம்பர் 24 ஆம் நாளிரவில் வந்து குழந்தைகளுக்குப் பரிசளிப்பார்.
இரண்டாவதாக, பல் தேவதை எனப்படும் டூத் பேரி (Tooth Fairy). இந்தப் பல்தேவதை ஒரு பொய் புனைவுக் கதாப்பாத்திரம். பற்களை இழக்கும் குழந்தைகளைத் தைரியப்படுத்த இந்தப் பல் தேவதை உருவாக்கப்பட்டாள். 1908 ஆம் ஆண்டில் சிகாகோ செய்தித்தாளில் தோன்றிய இந்தப் பல் தேவதை, ஹிஸ்பேனி பண்பாட்டில் குழந்தைகள் தங்கள் பற்களைத் தலையணைக்கு அடியில் பாதுகாத்து, அதனை எல் ரோட்டன்சிடோ பெரஸ் எனப்படும் வெள்ளை நிற எலிக்குத் தானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக அமைந்தது.
1927 ஆம் ஆண்டில் எஸ்தர் வாட் கின்ஸ் அர்னால்டு நாடகத்தில் பல் தேவதை பிரபலப்படுத்தப்பட்டாள். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு பல் தேவதை கூடுதல் புகழ் பெற்றாள். பல் தேவதை குழந்தைகளிடமிருந்து பற்களை வாங்கிக் கொண்டு பணமோ, பரிசோ தருவாள் என்பது நம்பிக்கையாக இருந்தது.
1984 ஆம் ஆண்டில் ரோஸ்மேரி வெல்ஸ் என்பவர் பல்தேவதை எப்படி இருப்பாள்? என்பதனை அறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். அக்கணக்கெடுப்பில், 74 சதவீத மக்கள் பல் தேவதை ஒரு பெண் என்றும், 12 சதவீத மக்கள் பல் தேவதை ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என்றும், 8 சதவீத மக்கள் பல் தேவதை ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம் எனப் பதில் அளித்தனர். பல் தேவதை இறக்கைகள் மற்றும் மந்திரக்கோலுடன் நடுத்தர வயதினவளாகக் காட்சியளிப்பாள் என்றனர் சிலர். பல் தேவதை முயல் அல்லது எலி போன்ற ஆள் என்றனர் சிலர். சில காமிக் புத்தகங்கள் பல் தேவதையை இறக்கைகள் முளைத்த சிறுமியாக, நற்குறளியாக, பறக்கும் நாகமாக, நீல நிற அம்மாவாக, கூட்டு நடனப் பெண்ணாக, இரட்டை குள்ள கிழவர்களாக, சிகரட் புதைக்கும் தொப்பை மனிதனாக, வௌவாலாக, கரடியாகச் சித்தரித்தனர்.
பல் தேவதைக்கு நிலையான உருவம் இல்லாவிட்டாலும் பல் தேவதையின் முக்கியத்துவம் சிறிதும் குறையவில்லை.
பல் தேவதையைப் பற்றி, மெரியம் வெப்ஸ்டர், கோலின்ஸ், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு லேனர் டிக்ஸ்னரி, பிரிட்டானிகா உள்ளிட்ட பல அகராதிகளில் குறிப்பிட்டுள்ளன. இந்த அகராதிகளில், மின்னும் முத்து இறக்கை கொண்டவள் (Shimmer Pearl Wing), டாலடிக்கும் பல் பாதுகாவலர் (Twinkle Tooth Keeper), படபடக்கும் பல் பாதுகாவலர் (Flutter Toothkeeper), பல் பொக்கிஷங்களின் தலைமை தேவதை (Chief Fairy of Dental Treasures) என்று பல புதுமையான பல் தேவதைகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெனிஸ் நகரத்தில் பல் தேவதையை மரேன்டேகா (Marantega) என்றும், இத்தாலியில் பேட்டினா டெப் டென்டி (Fatina Dei Denti) என்றும், பிரான்ஸில் லா பெட்டிட் சோரிஸ் (La Petite Soris) என்றும் அழைக்க்கின்றனர்.
எந்த பல் துலக்கி பயன்படுத்துவது?
ராசிக், திருநெல்வேலி
பல் துலக்குவதற்கு நெகிழி பல் துலக்கி சிறந்ததா?, மூங்கில் பல் துலக்கி சிறந்ததா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
உலகம் முழுவதும் 400 மில்லியன் டன் எனும் அளவில் நெகிழி பயன்பாடு இருந்து கொண்டிருக்கிறது. நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் மூங்கில் பல் துலக்கிகளைப் பயன்படுத்துவது சிறந்ததுதான். கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்படும் மூங்கில் பல் துலக்கிகள் பயன்பாடு அதிகரித்தால், அந்தக் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனும் நோக்கில், மூங்கில் பல் துலக்கிகளை நாம் ஆதரிக்கலாம். நெகிழி பல் துலக்கி, மூங்கில் பல் துலக்கி என்பதில் தங்கள் பண வசதிக்கேற்ப எதையும் பயன்படுத்தலாம்.
|
சீனர்கள் குறிப்பிட்ட பற்களுக்கும் குறிப்பிட்ட உடல் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறினர்.
* மேல் முன் பற்கள் – சிறுநீரகம், சிறுநீர் பை, இனப்பெருக்க உறுப்பு, கூம்பு சுரப்பி.
* கோரைப்பற்கள் – கல்லீரல், கண்கள், பித்தப்பை.
* மேல் முன்கடைவாய்ப் பல் – நுரையீரல், வயிறு மற்றும் நுகரும் திறன்.
* மேல் கடைவாய்ப் பல் – கணையம், பெருங்குடல், தைராய்டு சுரப்பி, சுவை உணர்வு.
* மேல் அறிவுப் பற்கள் – சிறுகுடல், இதயம், செவித்திறன்.
* கீழ் முன்னம் பற்கள் – சிறுநீரகம், சிறுநீர்பை, இனப்பெருக்க உறுப்புகள்.
* கீழ் கோரைப்பற்கள் – கல்லீரல், பித்தப்பை, கண்கள்.
* கீழ் முன்கடைவாய்ப் பல் – கணையம், வயிறு, சுவை உணர்வு.
* கீழ் கடைவாய்ப் பல் – நுரையீரல், பெருங்குடல்.
* கீழ் அறிவுப் பற்கள் – சிறுகுடல், இதயம், செவித்திறன்.
என்று ஒவ்வொரு பற்களும் சில உடலுறுப்புகளின் செயல்பாட்டில் தொடர்புடையவைகளாக இருக்கின்றன என்று சீனர்கள் சொல்கின்றனர்.