தீவிரமான நோய்க்குள்ளாகி வாழ்வின் இறுதி நாட்களைக் கழிக்கும் சிகிச்சைப் பிரிவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ப்ரோன்னிவேர் என்ற நர்ஸ் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்.
அவர், இறக்கும் தருவாயிலுள்ள நோயாளிகள் தங்களின் வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில் அவர்கள் கண்களில் தோன்றிய ஏக்கம், தாம் தவறவிட்டதாகக் கருதியவை போன்ற யாவற்றையும் இணையதளத்தில் பதிவு செய்து வந்தார்,
அதுவே 'இறப்பவர்களின் ஐந்து வருத்தங்கள்' – 'The Top Five Regrets of the Dying' என்ற நூலாக வெளியானது.
திருப்தியோடு மரணமடைய அவர்கள் தயாராக இருந்தார்களா? அல்லது வாழ்க்கையை வேறு விதமாக வாழ்ந்திருக்கலாமே என்ற தவிப்பு இருந்ததா அவர்களிடம்? - இதை அறிய விழைந்தார் அந்த நர்ஸ்.
அவர் வினவிய பல நோயாளிகளிடமிருந்தும் பொதுவாக ஒரே மாதிரியான பதில்களே கிடைத்தன. அவை;
1. 'ம், உண்மையானவனாக வாழ்ந்திருக்கக்கூடிய தைரியம் எனக்கு இருக்கவில்லை. பிறரின் எதிர்பார்ப்புக்கு ஏற்பப் போலியாக வாழ்ந்து விட்டேன்!'
தற்போது ஏங்கித் தவிக்கும் இம்முதிய உள்ளங்களில் குடும்பம், அலுவலகம், சமூகம் இவற்றில் உள்ள சிலரை மகிழ்விப்பதற்காக எடுத்த, எடுத்திருக்க வேண்டிய முடிவுகளால் போலியாக வாழ்ந்துவிட்டோம் என்ற துக்கம் பீறிட்டது.
2. 'வீணாக அளவிற்கு அதிகமாகவே உழைத்துவிட்டேன்'
சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றிய ஒவ்வொரு முதிய ஆணும் கூறிக் கொள்ளும் தற்குற்றச்சாட்டு இது. தன் பிள்ளைகளின் கல்வி, அவர்களின் இளமை, மனைவியின் இனிய தோழமை அனைத்தையும் அனுபவிக்காமலே தொலைத்து விட்டு மரணப் படுக்கையில் மோட்டு வளையில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறார்கள் இவர்கள்.
பெண்களுக்கும் இந்தக் குறை இருந்தது. ஆனால் அங்கிருந்த முதிய பெண்கள் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். குடும்பத்தில் சம்பாதிக்கும் கடமைச் சுமை இல்லாததால் இந்தப் புலம்பல் அவர்களிடம் குறைந்து காணப்பட்டது.
3. 'என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தைரியம் இருந்ததில்லை'
தம் திறமையால் எப்படியெல்லாம் உண்மையில் வாழ்ந்திருக்க முடியுமோ, அப்படி வாழாமல் அதன் விளைவான மன அழுத்தமும் மனக் கசப்பும் ஆத்திரமும் தந்த நோய்களைப் பரிசாகப் பெற்று இதோ, இப்படிப் படுத்தபடி...!
4. 'என் நண்பர்களின் தொடர்புடன் சமூக சேவை செய்திருக்கலாம்'
நட்புக்காகவும் பிறரது சேவைக்காகவும் செலவழிக்க வேண்டிய நேரத்தையும் சக்தியையும் வீணாக்கிவிட்டு இறக்கும் நேரத்தில் பெரும்பாலும் அனைவரும் கையாலாகாமல் அது குறித்து வருந்தினர்.
5. 'என்னை நானே மகிழ்ச்சியாக வைத்திருந்து வாழ்ந்திருக்கலாம்'
வியப்பளிக்கும் வகையில் அனைவரின் குறையாகும் இது. கடைசி நேரம் வரும்வரை மகிழ்ச்சி தன் கையில்தான் உள்ளது என்ற உண்மையே பலருக்கும் விளங்கவில்லை என்று குற்றம் சாட்டிக் கொண்டார்கள் இந்த முதியோர்கள்.
பாதுகாப்பான வாழ்க்கை ஒன்றிற்கே முக்கியத்துவம் அளித்தார்கள். அதனுள்ளும் மகிழ்ச்சியான தருணங்களைத் தாம் தேர்ந்தெடுத்திருக்க முடியும் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஒரே மாதிரியான முடிவுகளையே எடுத்ததன் மூலம் வாழ்வின் எத்தனை சந்தோஷங்களை இழந்தோம் என்று இப்போது ஏக்கம், வருத்தம், முனகல், கண்ணீர்.
இந்த முதியோர்களின் அனுபவங்கள் நமக்குப் பாடமல்லவா? திருப்தியாக வாழ்வதோ, திரும்பிப் பார்த்து ஏங்குவதோ இரண்டுமே நம் கையில்தான் இருக்கிறது.