அண்ணங்கராசாரிய சுவாமிகள் உடல் நலத்திற்கு நாளில் தொடங்கி, ஒரு வருடத்திற்கு இரண்டு குறிப்புகளைச் சொல்கிறார். அதாவது, எந்த நோயும் வராமல் இருக்க 1. தினம் இரண்டு, 2. வாரம் இரண்டு, 3. பட்சம் இரண்டு, 4. மாதம் இரண்டு, 5. ருது இரண்டு, 6. அயனம் இரண்டு, 7. வருடம் இரண்டு என்று குறிப்பிடுகிறார்.
தினம் இரண்டு
இதற்கு இரண்டு பொருள் உண்டு. பகலில் ஒரு முறையாகவும், இரவு ஒரு முறையாகவும் தினப்படி இரண்டு வேளை மட்டும் உணவு உட்கொள்வது.
இடைப்பலகாரம், கடைப்பலகாரம் என எதையும் அதிகப்படியாக உட்கொள்ளாமல் இருப்பது நலம்.
'தஸ்மாத் த்விரஹ்நோ மநுஷ்யேப்ய உபஹ்ரியதே: பிராதச் ச ஸாயஞ்' என்று வேதமும் இதையே குறிக்கிறது. தோன்றும் போதெல்லாம் உண்பது நோயைத் தரும்.
இன்னொரு பொருள்: உண்பதும், உறங்குவதுமாக இரண்டும் நாள்தோறும் முறைப்படி இருக்க வேண்டும்.
வாரம் இரண்டு
சனிக்கிழமை, புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பட்சம் இரண்டு
பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம். வாரம் இரண்டு என்பதற்கு வாரத்தில் இரண்டு நாளாவது ஆலயத்திற்குச் சென்று பகவானைத் தொழ வேண்டும் என்றும், பட்சம் இரண்டு என்பதற்கு வாரந்தோறும் (வாரத்தில் ஒரு நாளாவது) எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று கூறுவர் பெரியோர்.
மாதம் இரண்டு
15 நாட்களுக்கு ஒரு முறை ஏகாதசி வரும். ஏகாதசி தோறும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருக்க வேண்டும். சாஸ்திரம் ஏகாதசி உபவாசத்தை விதித்தது உடல் ஆரோக்கியத்தைக் கருதித்தான்.
ருது இரண்டு
இரண்டு மாதங்கள் கொண்டது 'ருது.' மாதந்தோறும் 'வபனம்' செய்து கொள்ள வேண்டும். தலையைச் சிரைத்துக் கொள்ள வேண்டும்.
அயனம் இரண்டு
ஆறு மாதங்கள் கொண்டது ஓர் அயனம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாகிலும் விரேசனம் கொள்ள வேண்டும். அதாவது உடலிலுள்ள கசடுகள் தீர்வதற்கு எண்ணெய் முதலியவற்றை அருந்த வேண்டும்.
வருடம் இரண்டு
சிலர் எப்போதுமே பயணம் செய்து கொண்டிருப்பர். சிலர் ஒரு நாளும் இருந்த இடத்தை விட்டு இடம் பெயராமலே இருப்பர். இரண்டும் நோய்க்கு ஏதுவாகும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கோயில்களுக்குப் பயணம் செய்ய வேண்டும்.
ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தில் பகவானுக்கு 'பேஷஜம்', என்ற திருநாமமும் 'பிஷக்' என்ற திருநாமமும் உள்ளன.
'பேஷஜம்' என்றால் மருந்து. 'பிஷக்' என்றால் மருத்துவன். ஆழ்வார்கள் எம்பெருமானை மருந்தாகவும் பேசுகிறார்கள், மருத்துவனாகவும் பேசுகிறார்கள்.
பெரியாழ்வார் 'மருத்துவனாய் நின்ற மணிவண்ணா' என்றே எம்பெருமானை விளிக்கிறார். ஆழ்வார்கள் அடியொற்றி நாம் எம்பெருமானை நினைப்பதும் தொழுவதுமே பெருமருந்தே.