பெண்களுக்கு மட்டும் வரும் புற்று நோய்கள்
கர்ப்பப்பை புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய், கருப்பை புற்று நோய், மார்பகப் புற்று நோய் போன்றவை பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள். இந்தப் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள், அறிகுறிகள், சிகிச்சைக்கான வழிமுறைகள் போன்ற சிறு குறிப்புகளைத் தெரிந்து கொள்வோமா?
கர்ப்பப்பை புற்று நோய்
இந்தப் புற்று நோய் பெரும்பான்மையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே வருகிறது. உடல் பருமன், இரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் உடைய பெண்களுக்கு இந்தப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நோய்க்கு துவக்கக் காலத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் இது கர்ப்பப்பையின் உட்புற பாகங்கள், பிறப்புறுப்பு, சிறுநீர்பை, பெருங்குடல் ஆகியவற்றுக்கு இந்நோய் பரவி விடும். இதன் பிறகு இரத்தம் மூலமாக உடலின் பிற பாகங்களுக்கும் பரவி அழித்து விடும்.
ஒழுங்கற்ற மாதவிலக்குதான் இந்தப் புற்று நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
கர்ப்பப்பை வாய் புற்று நோய்
இந்தப் புற்று நோய் பாதிப்பிருந்தால் பிறப்புறுப்பில் அதிகப்படியான நீர் அல்லது ரத்தக்கசிவு தொடரும். உடலுறவுக்குப் பின்பும் இரத்தக்கசிவும் ஏற்படலாம். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. புற்றுநோய் பரிசோதனை மையத்தில் " பேப் டெஸ்ட்" எனும் பரிசோதனை மூலம் இந்நோயைக் கண்டறியலாம். பிறப்புறுப்புக் கசிவைக் கண்டு பரிசோதிப்பதன் மூலம் புற்று நோய் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். ஆண்டுக்கு ஒரு முறை இதற்கான பரிசோதனையை செய்து கொண்டால் இந்நோயை ஆரம்பித்திலேயே கண்டு பிடித்து விடலாம்.
கருப்பை புற்று நோய்
இந்தப் புற்று நோயில் ஓவரியின் கீழ் கட்டி தோன்றும். இந்தக் கட்டி பொதுவாக நோயாளிக்கு அடிக்கடி வயிற்று வலியை உண்டு பண்ணும். இந்நோய்க்கான அறிகுறிகள் முற்றிய நிலையில்தான் தெரிய வரும். இந்நோயிருக்கிறதென்று " அல்ட்ரா சவுண்ட் " மூலமாக மட்டுமே கண்டு பிடிக்க முடியும்.
இளம் வயதுத் திருமணம், பல ஆண்களுடனான உடலுறவு, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவை போன்றவை கூட கருப்பை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி விடுகிறது.
மேலும் பிரசவத்தால் உண்டாகும் காயங்களை உடனடியாகக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலுறவின் போது ஆணுறையைப் பயன்படுத்தச் சொல்ல வேண்டும். ஒழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். என்பது போன்றவை இந்நோய் வராமல் தடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கைகள்.
மார்பகப் புற்று நோய்
இந்தப் புற்று நோய் வலியுடன் கூடிய முடிச்சுகளிலிருந்து துவங்குகிறது. இந்த முடிச்சு மார்பகத்தின் மேல்பகுதியில் வெளிப்புறமாகத் தோன்றுகிறது. பிறகு இந்த முடிச்சு அக்குள், கழுத்து மற்றும் மார்பு முழுவதும் பரவி விடுகிறது. இதன் பிறகு இரத்தம் மூலம் உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
மார்பகத்தில் துவங்கும் இந்தப் புற்று நோய் வடிவத்தில் மிகச் சிறியதாக இருக்கும். இது அக்குள் பகுதியில் பரவுவதற்குள் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது எளிது. இந்நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயாளி தனது மார்பு வடிவத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இந்த மார்பக புற்று நோயின் போது, மார்பில் எங்காவது கட்டி அல்லது முடிச்சு, வீக்கம், சிவந்து காணப்படுதல், காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் தெரிந்தாலே உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் .
35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
தொகுப்பு: சித்ரா பலவேசம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.