இயன்முறை மருத்துவத்தில் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கும் முறை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
உடம்பில் உள்ள மிக மிருதுவான திசுக்களில் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்த இயன்முறை மருத்துவத்தில் உபயோகிக்கும் “வெப்பம் தரும் மருத்துவம்” என்கிற பனிக்கட்டி ஒத்தடம் பயன்படுத்தப்படுகிறது. மருந்து, மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்திப் பக்க விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு பனிக்கட்டி ஒத்தடம் அலோபதி, சித்தா, ஆயுர்வேதா போன்ற அனைத்து வகையான மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நம் உடம்பில் காயங்கள் ஏற்படும் போது inflammatioin என்ற வேதியல் மாற்றம் ஏற்படுகிறது, இந்த மாற்றத்தை தமிழில் உடல் அழற்சி என்று கூறுவார்கள். காயங்கள் ஏற்படும் போது அடிப்பட்ட இடத்தில் ரத்தம் ஓட்டம் பொதுவாக பாதிப்படையும். பொதுவாகக் காயங்கள் விபத்துகளால் ஏற்படும், அதாவது நாம் படுத்து இருக்கும் போதோ அல்லது தூங்கும் போதோ காயங்கள் ஏற்படுவதில்லை. நம் உடலில் அதிக உராய்வு விசை அல்லது எதிர்மறையான விசை தாக்கும் போது காயங்கள் ஏற்படுகின்றன.
நம்மை சுற்றியுள்ள பல்வேறு விசைகளில் புவிஈர்ப்பு விசை குறிப்பிடத்தக்க ஒன்று இந்த விசை மிக அதிக வேகத்தில் நம்மைத் தாக்கினால் அல்லது விசையே இல்லாமல் போனால் அல்லது விசையை எதிர்கொள்ள முடியாமல் போனால் நாம் கீழே விழ நேரும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களால் உடம்பு முதலில் ஏற்படுத்தும் மாற்றம் உடல் அழற்சி ஆகும். இந்த அழற்சியின் விளைவாக ஐந்து மாற்றங்கள் நம் உடலில் ஏற்படுகின்றன. அதாவது;
1. அடிப்பட்ட இடம் சிவந்து போகுதுதல்,
2. வீக்கம் அடைதல்,
3. சூடு ஏற்படுதல்,
4. வலி ஏற்படுதல்,
5. அடிப்பட்ட இடத்தில் உள்ள செல்கள் அல்லது திசுக்கள் வேலை செய்யாமல் போகுதல்.
இதன் விளைவாக வீக்கம், வலி ஏற்பட்டும் நம் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதை நாம் உணர்கிறோம். உணருதல் என்பது மிக ஒரு முக்கிய பண்பாகும். இந்த உணர்ச்சியே நம்மைக் காத்துக்கொள்ள உதவுகிறது.
நம் உடலில் ஏற்படும் பல்வேறு காயங்களுக்கு நாமாக மருத்துவம் செய்து கொள்வதை விட, தகுதியுடைய மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது. மருத்துவர்கள் உடலில் இருக்கும் காயங்களை ACUTE மற்றும் CHRONIC காயங்கள் என்கிற இரண்டு வகைகளின் கீழ் பிரித்து மருத்துவ சிகிச்சையைத் தொடங்குகின்றனர்.
உடல் காயங்களின் போது ஏற்படும் அழற்சி மாற்றம் உடலில் அடிப்பட்ட இடத்தில வெப்பத்தை ஏற்படுத்தும், இந்த வெப்பத்தைத் தணித்து, காயம்பட்ட இடத்தில் அதிக பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கச் சொல்கின்றனர். இப்படி பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கும் போது காயம் பட்ட இடத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் முதலில் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் ரத்த ஓட்டம் வேகமாகப் பாய்வது குறைக்கப்படும். ரத்த ஓட்ட மாற்றம் உடனடியாக அந்த இடத்தில ஏற்படும் அழற்சி மாற்றங்களைக் கட்டுப்படுத்தி, வலியைக் குறைப்பதோடு, வீக்கத்தையும் குறைத்துத் திசுக்களை மீண்டும் பழைய நிலைக்கு வெகுவேகமாக திரும்பக் கொண்டு வர உதவுகின்றன.
ஒருவருக்கு அடிபட்டு இலேசான காயம் ஏற்படும் போதும், உள் காயங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் நாம் முதலுதவியாகப் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இது காயம்பட்டவரின் வலியைக் குறைத்து மீண்டும் சாதரண நிலைக்கு திரும்ப உதவுகிறது.