பார்வதியும் பரமசிவனும் வான வீதியில் சென்று கொண்டிருக்கையில், வனத்தில் ஞானி ஒருவர் தனது கிழிந்த ஆடையை ஊசி நூல் கொண்டு தைத்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
அவருக்கு ஏதேனும் வரம் கொடுக்க வேண்டும் என்று பார்வதி பரமசிவனை வேண்ட இருவரும் அவர் முன் நின்றனர்.
ஞானியும் அவர்களை வணங்கி, அவர்கள் பசியாறத் தன்னிடமிருந்த காய்கனிகளைக் கொடுத்து அவர்கள் உண்ண ஆரம்பித்தவுடன் தொடர்ந்து உடைகளைத் தைக்க ஆரம்பித்தார்.
உணவு உண்டு சிறிது நேரம் ஆகியும் ஞானி அவர்களைக் கண்டு கொள்ளவில்லை.
பரமசிவன் அவரிடம், “என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார்.
“சிவன் பார்வதியைத் தரிசித்ததை விடப் பெரிய வரம் ஏதுமில்லை” என்று ஞானி சொன்னார்.
பார்வதி மீண்டும் வற்புறுத்த ஞானி சொன்னார்,
“ஊசியின் பின்னே நூல் தொடர்ந்து செல்ல வரம் தாருங்கள்”
பார்வதி ஏமாற்றத்துடன், “ஊசியின் பின்னே நூல் வந்து கொண்டுதானே இருக்கிறது” என்றார்.
ஞானி சொன்னார், “செய்ய வேண்டியவைகளைச் சரியாகச் செய்து வந்தால், கடவுளின் அருள் பின்னால் தானே வந்து கொண்டு தானே இருக்கும்”