அண்ணாந்து ஆகாயம் நோக்கிய சின்னப்புல் சொன்னது, “இந்த அந்தி நேர மேகம்தான் எத்தனை அழகு! தகதகவென தங்கநிறத்தோடு.அந்த அழுக்கு மேகத்தைத்தான் பிடிக்கவில்ல. கன்னங்கரேல் என்று... இருக்கிறது”
அம்மாப்புல் அமைதி காத்தது.
தகித்தது புல்வெளி.
சின்னஞ்சிறு புல் ஒரு துளி நீருக்காக ஏங்கியது. நா உலர்ந்தது, உயிர் மெல்ல மெல்ல வறண்டது.
அதே நேரத்தில், அழுக்கு மேகம் இடியோசையோடு மழையாய்ப் பொழியத் துவங்கியது.
புல்வெளி எங்கும் பூரிப்பு.
அருகில் இருந்த அம்மாப்புல் சொன்னது:
“அழுக்கு மேகம் தன்னையே அழித்துக் கொண்டது, பார்த்தாயா? அழகாய் இருப்பவை எல்லாமே பயனுள்ளவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பயனுள்ளவை எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை”
சின்னப்புல் அம்மா சொன்னதை ஆமோதித்தது.