பதின்மூன்று ஆண்டு காலம் வனவாசம் என்று காட்டில் பொறுமையாக இருந்த தர்மரைப் பார்த்து பாஞ்சாலி துளைத்தெடுத்தாள்.
“பதின்மூன்று ஆண்டுகள் காத்திராமல் இடையில் நீர் போய் ஏன் துரியோதனனைக் கொல்லக் கூடாது? சத்தியம்,பொறுமை என்று தர்மத்தைக் கட்டி அழுகிறீரே, நீர் காப்பாற்றும் தர்மம் உம்மைக் காப்பாற்றவில்லையே?காட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டதே?”
அதைக் கேட்ட தர்மர் அமைதியாகச் சொன்னார்.
“பெண்ணே, தர்மம் என்னைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் நான் தர்மத்தைக் காப்பாற்றவில்லை. அப்படிச் செய்தால் அது வணிகமாகிவிடும். நான் தர்ம வணிகர் அல்ல. தர்மத்தைக் காப்பது என் பிறவிக்கடன். தர்மங்கள் என்னைக் காத்தாலும், காக்காது போனாலும், அவற்றைக் காப்பது என் கடமை. அதிலிருந்து நான் நழுவவே முடியாது”